“லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை உறுதி”! பட்டியல் தயார்! அதிகாரிகளை கண்காணிக்கும் தவெக அரசு?
லஞ்சம், ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பட்டியலை உளவுத்துறை மூலமாக த.வெ.க., அரசு சேகரிக்கிறது.
லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் குறித்த தகவல்களை உளவுத்துறை மூலம் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, அரசு சேவைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
அரசு சேவைகளை பெற பொதுமக்கள் லஞ்சம் வழங்க வேண்டியதில்லை என்றும், அரசு பணிகளுக்காக கட்சி நிதி வசூலிக்கப்படாது என்றும் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். மேலும், அரசு அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் கேட்டால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க சிறப்பு வாட்ஸ்அப் எண் வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு அரசு அலுவலர்கள் மத்தியில் கண்காணிப்பு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில துறைகளில் லஞ்சம் பெறும் நடைமுறைகள் குறைந்துள்ளதாகவும், இருப்பினும் சில இடங்களில் மறைமுகமாக பணம் பெறும் முயற்சிகள் தொடர்வதாகவும் புகார்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?
இதையடுத்து மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, மின்வாரியம், நில அளவைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தொடர்பான விவரங்களை சேகரிக்க உளவுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, எந்த அதிகாரிகள் மீது லஞ்ச புகார்கள் உள்ளன, அவர்கள் எத்தனை ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுகின்றனர், பணியிடங்களில் முறைகேடு குறித்த புகார்கள் உள்ளதா என்பது போன்ற தகவல்கள் திரட்டப்படுவதாக தெரிகிறது.
கோவை மாநகராட்சி உள்ளிட்ட சில பகுதிகளில் வெளியூர்களில் இருந்து அயல்பணியாக வந்துள்ள அதிகாரிகள் மீது சில புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. வரி வசூல் உள்ளிட்ட பணிகளில் கீழ்நிலை ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் சில தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
நகர ஊரமைப்பு துறை, பத்திரப்பதிவு துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட சில துறைகளில் லஞ்ச புகார்கள் தொடர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில இடங்களில் பணத்திற்கு பதிலாக வேறு வகையில் லஞ்சம் பெறும் முயற்சிகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை அல்லது பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் சில அரசு அலுவலர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் எந்த அளவுக்கு நடைமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்தி வரும் நிலையில், புகார்களின் அடிப்படையில் அரசு எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: முதல் பட்ஜெட்டுக்கு முதல்வர் விஜய் பெரிய திட்டம்!! மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தீவிர ஆலோசனை!