முதல் பட்ஜெட்டுக்கு முதல்வர் விஜய் பெரிய திட்டம்!! மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தீவிர ஆலோசனை!
பட்ஜெட் தாக்கல் செய்ய, பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த மனுக்களை முழுதுமாக படித்து பார்த்து, முக்கிய கோரிக்கைகளை செயல்படுத்த, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் முதல் பட்ஜெட் தாக்கலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை ஆய்வு செய்து முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பட்ஜெட் தயாரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, தொழில் துறையினர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கடந்த 14-ம் தேதி முதல் 3 நாட்கள் கருத்துகள் கேட்கப்பட்டன.
இந்த ஆலோசனைகளின்போது, பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அரசிடம் வழங்கினர். அமைச்சர்கள் மரியவில்சன், அருண்ராஜ், லோகேஷ் தமிழ்செல்வன், பர்வேஸ் மற்றும் நிதித்துறை செயலர் சித்திக் ஆகியோரிடம் அவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆண்டு செயல் திட்டங்கள் என்னென்ன?! துறை வாரியாக ஆய்வு கூட்டம் நடத்தும் முதல்வர் விஜய்!!
தமிழக வெற்றிக் கழக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவற்றை தேர்வு செய்து, அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கருத்துக் கேட்பு நிகழ்ச்சிகளில் மொத்தம் 80 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த மனுக்களை நிதித்துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறினார்.
அதிக நிதிச்சுமை இல்லாமல் உடனடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பட்ஜெட் அறிவிப்புகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
முதல் பட்ஜெட் என்பதால், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பொதுமக்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?! உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!