“தல” தேர்தலில் ஜனநாயக கடமையாற்றிய ‘ஜனநாயகன்’... நீலாங்கரையில் வாக்களித்த தவெக தலைவர் விஜய்...!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நீலாங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிட மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு 43 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வக்காளர்கள் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. கடும் வெயில் காரணமாக 12 மணிக்குள் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காலை 6 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நீலாங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். இதுவரை நடிகராக தனது வாக்கினை செலுத்தி வந்த விஜய், முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராகவும், தவெக வேட்பாளராகவும் வாக்களித்துள்ளார். விஜய் வாக்குச்சாவடிக்குள் வந்ததுமே ஏராளமான தொண்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசாரும், துணை ராணுவ படையினரும் உடனடியாக கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வாக்குச்சாவடிக்குள் விஜயை அனுப்பி வைத்தனர். அங்கு அதிகாரிகளின் வழிகாட்டுதலில் வாக்களித்த விஜய், தனது விரலில் வாக்களித்ததற்கான மையைக் காட்டினார்.
இதையும் படிங்க: எதிரி கூட்டம் உனக்கு மட்டும் கைகள் தட்டும் அதிசயமோ!! விஜயை பார்த்து திமுக கூட்டணியினர் உற்சாகம்!
தமிழக வெற்றிக் கழகம் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் அக்கட்சியின் தலைவரான விஜய் போட்டியிடுகிறார். முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக விஜய் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை மற்றும் ரோடு ஷோக்களை நடத்தினார். இதில் பெரும்பாலான தொகுதிகளுக்கு விஜய் பிரசாரம் செய்யாதது, அனுமதி கிடைத்தும் பல பிரசாரங்களை ரத்து செய்தது போன்ற சம்பவங்கள் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழ காரணமாக அமைந்தது. கரூர் பிரசாரத்தின் போது 41 பேர் உயிரிழப்பு, சிபிஐ விசாரணை, விவாகரத்து என பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை சந்திக்க உள்ளதால், அரசியல் களத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநருக்கு மாவுக்கட்டு...!! - இளைஞர் கால் மீது ஏறி இறங்கிய விஜய் பிரசார வாகனம்... செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்...!