×
 

அடுத்தடுத்து கண்ணீர் சிந்திய தவெக அமைச்சர்கள்... ‘ஜனநாயகன்’ வெளியீட்டில் நெகிழ வைத்த உணர்ச்சி தருணங்கள்!

தமிழக வெற்றிக் கழக (தவெக) அமைச்சரவையில், அமைச்சர் பர்வேஸைத் தொடர்ந்து மற்றுமொரு அமைச்சரான விக்னேஷ்வர் கண்ணீர் சிந்திய நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழக (தவெக) அமைச்சர்கள் அடுத்தடுத்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்திய சம்பவங்கள், ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகின்றன. மக்கள் அளித்த வரவேற்பு மற்றும் ரசிகர்களின் உற்சாகத்தை பார்த்து அமைச்சர்கள் நெகிழ்ந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பல இடங்களில் பட்டாசு வெடித்தும், விஜய் பாடல்களுக்கு நடனமாடியும் ரசிகர்கள் திரைப்பட வெளியீட்டை கொண்டாடினர்.

இந்த நிலையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு கவனம் பெற்றுள்ளது. புதுக்கோட்டை விஜய் திரையரங்கில் திரைப்படத்தை காண வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிங்க: தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாக திரையில் முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு புரோமோ வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதனை பார்த்த அமைச்சர் பர்வேஸ் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் ஆரவாரம் மற்றும் விஜய்க்கு கிடைத்த வரவேற்பை பார்த்த அவர் சில நிமிடங்கள் நெகிழ்ச்சியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னர் கண்ணீரை துடைத்துக் கொண்ட அமைச்சர் பர்வேஸ், ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் அமர்ந்து ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ரசித்தார். விசில் சத்தங்களுக்கும், ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கும் இடையே அவர் ஒரு ரசிகராகவே படத்தை பார்த்ததாக கூறப்படுகிறது.

இதேபோல், தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தொடக்கக் காட்சிகளைக் கண்டு நெகிழ்ச்சியடைந்து ஆனந்தக் கண்ணீர் விட்டார். திரையரங்கில் முதல்வர் விஜய் திரையில் தோன்றியதும் அவர் உணர்ச்சிவசப்பட்டார்.

நடிகராக இருந்து அரசியலில் களம் இறங்கிய விஜய்க்கு கிடைக்கும் மக்கள் ஆதரவு மற்றும் ரசிகர்களின் உணர்ச்சிபூர்வமான வரவேற்பு, தவெக வட்டாரத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு சினிமா நிகழ்வை தாண்டி அரசியல் கவனத்தையும் பெற்றுள்ள நிலையில், அமைச்சர்களின் இந்த உணர்ச்சி தருணங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்!! தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சம்பவம்! ‘ஜன நாயகன்’ புதிய சாதனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share