தவெக கூட்டணியில் பாமக! விசிக வைத்த ‘செக்’! திருமாவளவன் தரப்பின் அதிரடி நிலைப்பாடு!
பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக தொடராது என்பதே தங்கள் நீண்டகால நிலைப்பாடு என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும், அமைச்சர் வன்னி அரசும் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் பாமக இணைய உள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பாமக சட்டமன்றக் குழுத் தலைவரும் தருமபுரி எம்.எல்.ஏ.வுமான சவுமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவலும் பரவியது. ஆனால், இந்த தகவலை சவுமியா அன்புமணி ஏற்கெனவே மறுத்துள்ளார்.
தவெக தலைமையிலான கூட்டணி ஏற்கெனவே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கியதாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் முன் கூட்டணியை மேலும் விரிவுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பாமக–தவெக கூட்டணி குறித்த தகவல்களுக்கு சவுமியா அன்புமணி விளக்கம் அளித்துள்ளார். இடைத்தேர்தலுக்குப் பிறகு பாமக தவெக கூட்டணியில் இணையும் என்ற தகவல் வதந்தி என்றும், அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க: தாராபுரம் பிரசாரம்! ரூட் மாறுகிறது முதல்வர் விஜய் செல்லும் பாதை! கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
மறுபுறம், தவெக கூட்டணியில் பாமக இடம்பெறுவது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக தொடராது என்பதே தங்கள் நீண்டகால நிலைப்பாடு என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும், அமைச்சர் வன்னி அரசும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பாமக–பாஜக இடம்பெறும் அணியில் விசிக இருக்காது என்றும் வன்னி அரசு கூறியுள்ளார்.
அதே நேரத்தில், தவெக தரப்பில் கூட்டணி விரிவாக்கம் குறித்து இறுதி முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. அமைச்சர் ராஜ்மோகன், கூட்டணியில் புதிய கட்சி சேருவது குறித்து முதல்வர் விஜய் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் பாமக இணைப்பு குறித்த தகவல் தற்போது அரசியல் விவாதமாக மட்டுமே நீடிக்கிறது.
இந்நிலையில், பாமகவை இணைக்கும் முயற்சியும், அதற்கு விசிக தெரிவிக்கும் எதிர்ப்பும் ஒரே நேரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இடைத்தேர்தலுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் தவெக தலைமை என்ன முடிவு எடுக்கிறது என்பதே அடுத்தகட்ட அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: SIR விவகாரம்! அக்டோபர் 15-ல் சென்னையில் இந்தியா கூட்டணி மெகா போராட்டம்! முதல்வர் விஜய்க்கும் அழைப்பு?!