×
 

அமைச்சர் அறை வரை சென்ற கேமரா! தலைமைச் செயலக பாதுகாப்பில் வெடித்தது சர்ச்சை! அதிகாரிகள் அதிர்ச்சி!

தலைமைச் செயலகம் மற்றும் அமைச்சர்களின் அறைகளுக்குள் சென்று, 'ரீல்ஸ்' எடுக்கும் த.வெ.க.,வினரால், பாதுகாப்பு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தின் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அமைச்சர்களை சந்திக்க அனுமதி பெற்று வரும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் சிலர், தலைமைச் செயலகத்தின் உள்ளே சென்று வீடியோ பதிவு செய்து, அவற்றை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக வெளியிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற பின்னர், முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கவும், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திக்கவும் தலைமைச் செயலகத்திற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தலைமைச் செயலக நுழைவாயிலில் பணியாற்றும் போலீசார், மூன்று ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளே வருபவர்களிடம் அவர்கள் யாரை சந்திக்க வருகின்றனர், அனுமதி பெறப்பட்டுள்ளதா, வருகையின் காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: சர்ச்சையைக் கிளப்பிய சி.எம்.விஜய் கர்நாடகா விசிட்... அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்...!

இந்நிலையில், உரிய அனுமதியுடன் உள்ளே செல்லும் சிலர், நுழைவாயில் முதல் அமைச்சர்களின் அறைகள் வரை செல்லும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தலைமைச் செயலகத்தின் பல பகுதிகள் வழியாக எவ்வாறு செல்லலாம் என்பதையும் சிலர் வீடியோக்களில் பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் கனிமவளத்துறை அமைச்சர் பிரபுவை சந்திக்க சென்ற இளம்பெண் ஒருவர், தலைமைச் செயலகத்திற்குள் சென்ற காட்சிகளையும், அமைச்சரை சந்தித்த தருணங்களையும் ரீல்ஸ் வடிவில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வி.ஐ.பி., லிப்டில் அவர் பயணம் செய்த காட்சிகளும் வெளியாகியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தலைமைச் செயலக பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து போலீசார் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய அரசு அலுவலகங்களின் உள் அமைப்பு, செல்லும் வழிகள் போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவது பாதுகாப்பு ரீதியாக ஆபத்தை ஏற்படுத்தலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதையடுத்து, தலைமைச் செயலகத்திற்குள் வீடியோ பதிவு செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பாதுகாப்பு விதிமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசு அலுவலகங்களில் சமூக வலைதள பிரபலத்துக்காக எடுக்கப்படும் வீடியோக்கள் எந்த அளவுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விவாதமும் தற்போது எழுந்துள்ளது.

இதையும் படிங்க: “யாரா இருந்தாலும் சரி...” - அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கொடுத்த கடைசி வார்னிங்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share