×
 

உதயநிதிக்கு விஜயால் உண்டான அரசியல் நெருக்கடி! தவெகவை சமாளிக்க வீடு வீடாக செல்லும் திமுக இளைஞரணி!

த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, துணை முதல்வர் உதயநிதி சில ஆலோசனைகளை கூறியுள்ளார்.

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் பிரசாரத்தில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் ஆதரவு, திமுகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலை சமாளிக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

திமுக வட்டாரங்கள் தெரிவித்தபடி, விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆதரவு காரணமாக அவர்களின் வாக்குகள் திமுகவுக்கு விழுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள 5 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகளை வீடு வீடாக அனுப்பி, இளம் வாக்காளர்களை ஈர்க்கும் திட்டத்தை திமுக தீட்டியுள்ளது.

ஒவ்வொரு பூத்திற்கும் 10 இளைஞர்கள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைக்க உள்ளனர். குறிப்பாக இலவச லேப்டாப் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை விளக்கி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி இளைஞர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

இதையும் படிங்க: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?! ராகுல்காந்தி யோசிப்பது என்ன? தாமதம்? இழுபறி ஏன்?

இந்த இளைஞர் அணி பிரசாரப் பணி இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டம் இன்று முதல் 10ஆம் தேதி வரையும், இரண்டாவது கட்டம் 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையும் நடைபெறும். இந்த பணியின் மூலம் விஜய் பக்கம் சாயும் இளம் வாக்காளர்களை மீட்டெடுக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது.

துணை முதல்வர் உதயநிதியின் ஆலோசனையின்பேரில் தயாரிக்கப்பட்ட இந்த திட்டம், திமுகவின் இளைஞர் அணியின் முழு பலத்தையும் பயன்படுத்தி இளைஞர்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 

விஜயின் பிரசாரம் இளைஞர்களை பெரும் அளவில் ஈர்த்து வரும் நிலையில், திமுக இந்த எதிர்ப்பை சந்திக்கும் வகையில் வீடு வீடாக செல்லும் இந்த பிரசார உத்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இளைஞர் வாக்குகளுக்காக திமுகவும் த.வெ.க.வும் இடையே கடும் போட்டி நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

இந்த புதிய உத்தி திமுகவுக்கு இளைஞர் வாக்குகளை தக்கவைக்க உதவுமா என்பது விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ரூ.200 கோடி சம்பளம்னு சொன்னாங்களே விஜய்? உச்சத்த விட்டு வந்த உங்களுக்கு மிச்சம் இம்புட்டு தானா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share