×
 

தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்! 22-ல் அதிமுக - பாஜக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து?

அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் வரும் 22-ஆம் தேதி கையெழுத்தாக உள்ள நிலையில், அதற்காக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருகிறார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் தமிழகத்தில் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் 3 நாள் பயணமாக வரும் 21-ஆம் தேதி சென்னை வருகிறார். 22-ஆம் தேதி அதிமுக - பாஜக இடையிலான அதிகாரப்பூர்வ கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள அதிமுகவும், அதன் முக்கியப் பங்காளியான பாஜகவும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில், மத்திய அமைச்சரும், தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் வரும் ஜனவரி 21-ஆம் தேதி 3 நாள் பயணமாகத் தமிழகம் வருகிறார். இவருடன் இணைப் பொறுப்பாளர்களான அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மோஹோல் ஆகியோரும் வருகை தர உள்ளனர்.

இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, ஜனவரி 22-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அல்லது கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் வைத்து இரு கட்சிகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. கடந்த டிசம்பர் மாதமே அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்த இறுதி வடிவம் இந்தப் பயணத்தில் எட்டப்படும் எனத் தெரிகிறது. பாஜக தரப்பில் கேட்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அதிமுகவின் ஒதுக்கீடு குறித்து நிலவி வந்த இழுபறியான இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அதிமுகவை மீட்பதே இலக்கு! கள்ளக்குறிச்சியில் சசிகலா இன்று ஆலோசனை; எடப்பாடிக்கு எதிராக புதிய வியூகம்!

மேலும், ஏற்கனவே கூட்டணியில் இணைந்துள்ள பாமக மற்றும் விரைவில் இணையவுள்ள தேமுதிக, தமாகா உள்ளிட்ட இதர கட்சிகளுடனும் பியூஷ் கோயல் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வரும் 23-ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள மதுராந்தகம் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, மெகா கூட்டணியின் முழு வடிவத்தையும் அறிவிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. "திமுகவின் கோட்டையைத் தகர்க்க வலுவான கூட்டணியை அமைப்பதே எங்கள் இலக்கு" எனத் தமிழக பாஜக நிர்வாகிகள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். பியூஷ் கோயலின் இந்த வருகை தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.


 

இதையும் படிங்க: ஒரே மேடையில் மோடி - இபிஎஸ்!  மதுராந்தகத்தில் என்.டி.ஏ கூட்டணி அறிவிப்பு? நயினார் நாகேந்திரன் அதிரடி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share