ஒரத்தநாடு தொகுதி உங்களுக்கு இல்ல!! கட்சியில் இணைந்த கையோடு வைத்திலிங்கத்துக்கு திமுக ஷாக்!!
ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து, தற்போது திமுகவில் இணைந்துள்ள வைத்திலிங்கத்திற்கு வரும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் களம் காண மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பெரிய அதிரடி! ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தரப்பின் முக்கிய தளபதியாக இருந்து, சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மாட்டார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பதிலாக அவரது மூத்த மகன் பிரபு ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்க உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம், டெல்டா பகுதியில் 'சோழ மண்டல தளபதி' என்று அதிமுகவினரால் அழைக்கப்பட்டவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த அவர், அவரது அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக இருந்து டெல்டாவில் அதிகாரம் மிக்கவராக வலம் வந்தார்.
2001 முதல் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த அவர், 2016-இல் திமுகவின் மா. ராமச்சந்திரனிடம் தோல்வியடைந்தாலும், 2021-இல் மீண்டும் வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் 9 மாதங்கள் ஒரத்தநாடு எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
இதையும் படிங்க: காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்!! அடுத்த விக்கெட் வெல்லமண்டி நடராஜன்?! திமுக பக்கா ஸ்கெட்ச்!
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டைத் தலைமை ஏற்பட்டபோது, ஓபிஎஸ்-எடப்பாடி இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்தது. இதில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக வைத்திலிங்கம் தீவிரமாக செயல்பட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் போன்றோருடன் சேர்ந்து ஓபிஎஸ் 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' தொடங்கினார்.
கடந்த டிசம்பர் 25-ஆம் தேதிக்குள் அதிமுக ஒன்றிணையாவிட்டால் புதிய கட்சி தொடங்குவோம் என்று அறிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ் தீர்க்கமான முடிவு எடுக்காததால் வைத்திலிங்கம் உள்ளிட்டோருக்கு அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது. மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். ஜேசிடி பிரபாகரன் தவெகவில் சேர்ந்தார். இந்நிலையில் வைத்திலிங்கமும் ஜனவரி 21 அன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், "திமுக தான் எங்களுக்கு தாய் கழகம். ஓபிஎஸ் கூட்டணி விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் தாமதப்படுத்தியதால் திமுகவில் இணைந்தோம்" என்று தெரிவித்தார்.
ஆனால் தற்போது அவர் திமுக சார்பில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட மாட்டார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கு பதிலாக மகன் பிரபுவுக்கு அந்த தொகுதியை ஒதுக்குமாறு வைத்திலிங்கம் திமுக தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரத்தநாடு அதிமுகவின் பாரம்பரிய கோட்டையாக இருந்து வரும் நிலையில், வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததால் அவரது மகன் பிரபு வெற்றி பெற்றால் அந்த தொகுதி திமுக கோட்டையாக மாறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வைத்திலிங்கம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதால், ஒரத்தநாட்டில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த மாற்றம் டெல்டா மாவட்டங்களில் திமுகவுக்கு பெரும் வலிமை சேர்க்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் போட்டோவை எப்படி அகற்றுவேன்! அரசியலை விட்டே போறேன்! திடீர் ட்விஸ்ட் அடித்த குன்னம் ராமச்சந்திரன்!