கூட்டணி கட்சிகளின் உதவியோடு பழனிசாமி முதல்வரவார்!! வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடர் கணிப்பு!
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு, யார் முதல்வராக வருவார் என்பது குறித்து மகா சிவ நாடி ஜோதிடம் பார்க்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில், நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நாடி ஜோதிடம் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் தங்கள் எதிர்காலத்தை அறிய இங்கு வருகை தருகின்றனர்.
இங்குள்ள பல நாடி ஜோதிட நிலையங்களில் மகா சிவ நாடி, அகத்தியர் நாடி, பிருகு நாடி உள்ளிட்ட பல்வேறு சித்தர்களின் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. தொழில், திருமணம், ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை உள்ளிட்டவை பற்றி சித்தர்களின் பாடல் வடிவில் ஓலைச்சுவடிகள் மூலம் ஜோதிடம் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் குறித்து மகா சிவ நாடி ஜோதிடம் பார்க்கப்பட்டது. ஓலைச்சுவடியில் பாடல் வடிவில் “சிவனின் இளைய மகன் பெயர் கொண்ட நபர், நல்லவர்களின் துணையுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார்” என்று ஆருட காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாக்குப்பதிவு முடிந்து 3 நாட்களாகியும் தேர்தல் ஆணையம் மெத்தனம்! ஓட்டுப்பதிவு விவரம் வெளியாவதில் தாமதம்!
மகா சிவ நாடி ஜோதிடர் சிவசாமி இதுகுறித்து கூறுகையில், “2021-ல் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார் என்று நாடியில் வந்தது. 2024 லோக்சபா தேர்தலில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்றும் நாடி சரியாகக் கணித்தது.
தற்போது சிவனின் இளைய மகன் எனப்படும் முருகன் பெயர் கொண்டவர் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என்று ஓலைச்சுவடியில் தெளிவாக உள்ளது. இதன்மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உதவியுடன் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வாய்ப்பு உள்ளது” என்றார்.
தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே வெளியான நாடி ஜோதிடக் கணிப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
வைத்தீஸ்வரன்கோவில் நாடி ஜோதிடம் பல ஆண்டுகளாக துல்லியமான கணிப்புகளுக்குப் பெயர் பெற்றது. பல முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே சரியாகக் கூறியுள்ளதாக பக்தர்கள் நம்புகின்றனர். எனினும், இது ஜோதிட நம்பிக்கை சார்ந்தது என்பதால், இறுதி முடிவு மக்கள் வாக்குகளில்தான் இருக்கும் என்றும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேர்தல் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், நாடி ஜோதிடத்தின் இந்தப் பரபரப்பான கணிப்பு மக்களிடையே புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. பக்தர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் இந்த ஓலைச்சுவடியின் துல்லியத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: பூத் ஏஜெண்டுகளுக்கு சிறப்பு கவனிப்பு!! ஆஃபர்களை அள்ளித் தெளிக்கும் திமுக! ,மு.க.ஸ்டாலின் திட்டம்!