சிறைக்குள் சபரி வர்மனுக்கு நடந்தது என்ன..? யார் பொறுப்பு..? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!
சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் வேல்முருகன் சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார்.
சிறைக்குள், சபரிவர்மனுக்கு நடந்தது என்ன? உண்மையை மறைப்பது யார்? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பெரும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.
சிறைக்குள் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி இருப்பதை சுட்டிக்காட்டிய வேல்முருகன், கை, கால்கள், நெஞ்சுப் பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும், அவை தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், தலை மற்றும் பின்கழுத்திலும் காயங்கள் இருப்பதாக, நீதிபதி முன்னிலையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனைத் தகவல்கள் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் இது இயல்பான மரணமா? அல்லது காவல் மற்றும் சிறை நிர்வாகத்தின் திட்டமிட்ட செயலா? என்ற கேள்வி தமிழக மக்களின் மனதில் எழுந்துள்ளது என்றார். ஒரு விசாரணைக் கைதிக்கு சிறைக்குள் இப்படிப்பட்ட காயங்கள் எப்படி ஏற்பட்டன? சிறை நிர்வாகத்தின் கண்காணிப்பு எங்கே சென்றது? சிறைக்குள் தாக்குதல் நடந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு? உண்மையை மறைக்க ஏதேனும் முயற்சியும் நடைபெறுகிறதா? என அடுக்கடுக்கான கேள்விகளை அவர் முன் வைத்துள்ளார்.
சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நபரின் உயிருக்கும் முழுப் பொறுப்பு அரசுக்கும், சிறை நிர்வாகத்திற்கும் தான் என்றும் காவலில் இருப்பவரின் உயிரைப் பாதுகாக்க முடியாத அரசு, சட்டத்தின் ஆட்சியை எவ்வாறு நிலைநிறுத்தப் போகிறது? எனவும் கேள்வி எழுப்பினார். எனவே, சபரிவர்மன் உயிரிழப்பு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாதீன நீதித்துறை விசாரணை நடத்தத் தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுத்து, உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!
ஒரு மனித உயிரின் மதிப்பைக் காக்க வேண்டியது அரசின் முதன்மைக் கடமை. சபரிவர்மன் உயிரிழப்பு சம்பவத்தில் உண்மையை மறைக்காமல், முழு வெளிப்படைத்தன்மையுடன் நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த சபரிவர்மன் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் வரை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!