"விஜய், சீமான் இருவருமே பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்!" – மதுரையில் திருமாவளவன் அதிரடி!
தமிழக அரசியலில் விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருமே பாரதிய ஜனதா கட்சி பெற்றெடுத்த பிள்ளைகள் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் மிகக் கடுமையான விமர்சித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவெறி அரசியலைத் தூண்டி கலவரத்தை உருவாக்க முயலும் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகளைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த எழுச்சிமிகு போராட்டத்தில், பல்வேறு தோழமை கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான விசிக தொண்டர்கள் கலந்துகொண்டு ‘அனல்’ பறக்கும் முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக உரையாற்றிய திருமாவளவன், "திருப்பரங்குன்றத்தைப் பற்றிப் பேச இந்த மண்ணின் மைந்தன் என்ற தகுதி எனக்குப் போதும். நான் முருகனைத் தரிசித்துவிட்டு வரும்போது பூசிய திருநீற்றை வைத்து அரசியல் செய்தார்கள். நான் பூசியது அவர்களுக்குப் பிரச்சனை இல்லை, அதை அழித்ததுதான் அவர்களுக்குப் பிரச்சனை. விபூதி பூசுவது அந்த இடத்திற்கான மரபு, அதனை நான் மதிக்கிறேன். ஆனால், அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும் இந்துக்களின் உண்மையான துரோகிகள். அவர்கள் கட்டமைக்க விரும்புவது இந்து ராஷ்டிரம் அல்ல, பார்ப்பன ராஷ்டிரம். தமிழ் கடவுள் முருகனைச் சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றிப் பார்ப்பனர்களுக்குத் தொண்டு செய்பவனாகச் சித்தரிக்கிறார்கள். முருகன் என்ற பெயரைச் சொல்லவே எச்.ராஜாவுக்குத் தகுதியில்லை என்று சாடினார்.
தொடர்ந்து தற்கால அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், "சீமானும் விஜயும் ஆர்எஸ்எஸ், பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது இன்று அம்பலமாகிவிட்டது. ஒருவர் திமுகவை வீழ்த்தவே கட்சி தொடங்கி இருக்கிறார், மற்றொருவர் பிராமண கடப்பாரை கொண்டு பெரியாரை இடிப்பேன் என்கிறார். திமுக ஒரு தீய சக்தி என்பதுதான் விஜய்யின் ஒரே நோக்கம் என்றால், நீங்கள் தமிழக மக்களுக்காகக் கட்சி தொடங்கவில்லை, ஆர்எஸ்எஸ்-க்காகத் தொடங்கியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அரசியல் அறியாமையில் விஜய் எதையோ பேசுகிறார். திருமாவளவனுக்குப் பதவி ஆசை இருந்திருந்தால் விஜய்யின் பின்னால் போயிருப்போம். எங்களுக்குச் சீட் முக்கியமில்லை, கொள்கைதான் முக்கியம். பாமகவின் ஒரு பிரிவு திமுக கூட்டணிக்கு வந்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். சனாதனத்தை எதிர்க்கவே நாங்கள் திமுகவுடன் நிற்கிறோம்" என அதிரடி காட்டினார். மேலும், இந்தியா முழுவதும் 175 மசூதி மற்றும் தர்காக்களை இடிக்கச் சங்பரிவார் கும்பல் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம் என்றும் எச்சரித்த அவர், சமூக நீதியைக் காக்கத் தொடர்ந்து போராடுவோம் என உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: "பட்டினம்பாக்கத்தில் விஜய் திடீர் ஆலோசனை!" – கூட்டணி மற்றும் தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசனை!
இதையும் படிங்க: வார்த்தை ஜாலங்கள் பலிக்காது - விஜய்யை அரசியல்வாதியாக ஏற்க முடியாது - நெல்லையில் சரத்குமார் அதிரடி!