ஒரே இடத்தில் ஸ்டாலின், விஜய்... லயோலா கல்லூரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு... நொடிக்கு நொடி பரபரப்பு...!
சென்னை லயோலா கல்லூரியில் முதல் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் மற்றும் தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மூன்று முக்கிய மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. ராணி மேரி கல்லூரியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், திரு.வி.க. நகர், ராயபுரம், துறைமுகம் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகள். லயோலா கல்லூரி கல்லூரியில் பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணா நகர் தொகுதிகளும், அண்ணா பல்கலைக்கழகத்தில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது.
லயோலா கல்லூரியில் உள்ள தரைத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இங்கு அதிகாலை 5.30 மணிக்கே அனைத்து கட்சியின் உடைய பூத் ஏஜெண்ட்கள், அலுவலர்கள், போலீசார் என ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
முதல் தளத்தில அண்ணாநகர் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகளுக்கான வாக்குகளும் இரண்டாம் தளத்தில வில்லிவாக்கம், எழும்பூர் தொகுதிகளுக்கான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. ஒரே ஒரு கட்டிடத்தில் வெவ்வேறு தளங்களில் இந்த ஆறு தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகிறது. போலீசார் மட்டும் கிட்டத்தட்ட ஒரு ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மிகுந்த ஒரு பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன. முதல் முறையாக ஏஜென்டுகளுக்கு கியூஆர் கோடுடன் கூடிய அந்த அடையாள அட்டை என்பது வழங்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்: 5 மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்..?? நாடே உற்றுப்பார்க்கும் தருணம்..!!
முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது. வந்துள்ள தபால் வாக்குகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு செல்லுபடியாகும் வாக்குகள், செல்லுபடியாகாத வாக்குகள் என வகைப்படுத்தப்படும். அரை மணி நேரம் இந்த வாக்குகள் எண்ணி முடிக்கப்படும். இந்த தேர்தலில் மொத்தம் 4.61 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியிருந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 2.88 லட்சம் வாக்குகள் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுடையது. 85 வயதுக்கும் மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என 1.73 லட்சம் பேர் வாக்களித்தனர், 1.10 லட்சம் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் நேரடியாக வாக்களித்துள்ளனர். தேர்தல் வெற்றியில் தபால் வாக்குகள் எப்போதுமே பெரும் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்கு எண்ணும் பணியானது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உதவியுடன் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்வதற்காக 4,624 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒருவர் என மொத்தம் 234 வாக்கு எண்ணும் பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, உள்ளூர் காவல் துறை மற்றும் மாநில ஆயுதப் படையினருடன் கூடுதலாக, மத்திய ஆயுத காவல் படையின் 65 கம்பெனிகள் வாக்கு எண்ணும் மையங்களில் நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்த வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கும் வகையில் கடுமையான கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடையாள அட்டை இன்றி எவரும் மையத்தின் உள்ளே நுழைய அனுமதியில்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், வாக்கு எண்ணும் கூடத்தின் உள்ளே பாதுகாப்பைக் கருதி செல்போன் கொண்டு செல்லக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் பார்வையாளர்களை தவிர வேறு யாரும் வாக்கு எண்ணும் கூடத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்? தபால் வாக்குகள் எப்படி எண்ணப்படும்? - முழு விவரம் இதோ...!!