விஜய் பண்ணது தப்பு! நடவடிக்கை எடுங்க! வழிபாட்டு தளங்களில் அரசியல் அடையாளம்? சிபிஎம் புகார்!
மத வழிபாட்டு இடங்களுக்குள் (கோயில், தேவாலயங்கள், மசூதி) கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு கேட்கக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதி.
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் தீவிர ரோடு ஷோ நடத்தினார்.
அவரது பிரசார வாகனம் வயர்லஸ் சாலைப் பகுதியில் சென்றபோது, அந்தோணியார் கோவில், ஒரு மசூதி மற்றும் அம்மன் கோவில் ஆகிய மூன்று மத வழிபாட்டு இடங்களுக்கும் சென்று வழிபாடு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோடு ஷோவின்போது வயர்லஸ் சாலையில் உள்ள அந்தோணியார் கோவில் அருகே வந்ததும் விஜய் வாகனத்திலிருந்து இறங்கினார். பங்குத்தந்தை அவரை வரவேற்றார். ஆலயத்துக்குள் சென்ற விஜய் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார். அதன் பிறகு அருகில் உள்ள மசூதிக்குச் சென்ற அவர், அங்கு சால்வை அணிவித்து வரவேற்பு பெற்று வழிபாடு செய்தார்.
இதையும் படிங்க: 6 மணிக்கே நடையை கட்டிய விஜய்! அப்படி என்னதான் ஆச்சு? திருப்பூர், சென்னை பிரசாரம் பாதியில் முடிய காரணம்?
தொடர்ந்து அடுத்த கோவிலுக்குச் சென்றபோது அவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அம்மன் சன்னதிக்கு எதிரே நெடுஞ்சாண் கிடையாக படுத்து வணங்கிய விஜய்க்கு மாலை அணிவித்து தேங்காய் பழத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் பூசாரிகள் மற்றும் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.எம். மாநில செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “மத வழிபாட்டு இடங்களுக்குள் (கோயில், தேவாலயம், மசூதி) கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு கேட்கக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதி. த.வெ.க. தலைவர் விஜய் இந்த விதியை மீறியுள்ளார். எனவே தேர்தல் ஆணையம் அவர்மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
விஜய் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். நேற்றைய ரோடு ஷோவின்போது மத வழிபாட்டு இடங்களில் அவர் நடந்துகொண்ட விதம் தேர்தல் விதிமீறல் என சி.பி.எம். குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையம் இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்குமா என்பது அரசியல் வட்டாரத்தில் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டத்தில் இத்தகைய சம்பவங்கள் அரசியல் கட்சிகளிடையே புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. விஜய் தரப்போ இதுவரை இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த சர்ச்சை கடைசி நாட்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: வண்டியில உட்காந்துக்கிட்டு கை காட்டுறது இல்ல அரசியல்! விஜயை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!