×
 

காத்திருக்க வைத்து கம்பி நீட்டிய பாஜக!! விளவங்கோட்டில் விஜயதரணி போட்டி!! நிராசையான கனவு!

தேசிய அரசியலுக்கு செல்ல விரும்பிய விஜயதாரணியின் கனவு தற்போதைய சூழலுக்கு நிராசையாகியுள்ளது.

பாஜகவில் 2 ஆண்டுகளாக எந்தப் பதவியும் இல்லாமல் காத்திருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் எஸ். விஜயதாரணிக்கு விளவங்கோடு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய அரசியலுக்கு செல்லும் கனவுடன் காங்கிரஸை விட்டு பாஜகவுக்கு வந்த அவரது எதிர்பார்ப்பு இப்போது மீண்டும் மாநில அரசியலுக்கே திரும்பியுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 3) பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் விஜயதாரணி. தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தி ஆவார். காங்கிரஸ் மகளிர் அணி பொதுச் செயலாளராகவும், கர்நாடக மாநிலப் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். வழக்கறிஞரான அவர், மாநில அரசியலில் வலுவான செல்வாக்கு கொண்டவராக இருந்தார்.

இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சீட் மறுப்பு? பாஜகவுக்கு பின்னடைவா? கோவையில் சறுக்குமா? சாதிக்குமா? தேஜ கூட்டணி!

ஆனால் அவருக்கு மாநில அரசியலை விட தேசிய அரசியலில் ஆர்வம் அதிகம். எம்.பி. தேர்தலில் வாய்ப்பு கேட்டு பலமுறை முயற்சித்தும் அது கிடைக்கவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த விஜயதாரணி, 2024 பிப்ரவரி 24ஆம் தேதி காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்த பிறகும் அவருக்கு எம்.பி. சீட் கிடைக்கவில்லை. கட்சியில் எந்தப் பதவியும் வழங்கப்படாமல் இரண்டு ஆண்டுகள் கழிந்தன. இந்த நிலையில் தற்போது விளவங்கோடு சட்டசபைத் தொகுதியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எனினும், விளவங்கோடு தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இன்னும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிடாததால், அங்கு யார் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேசிய அரசியலுக்குச் செல்லும் ஆசையுடன் காங்கிரஸை விட்டு பாஜகவுக்கு வந்த விஜயதாரணி, இப்போது மீண்டும் மாநில அரசியலுக்கே திரும்பியுள்ளார். இதனால் “எதற்காக காங்கிரஸை விட்டு வந்தார்?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இன்று வெளியான பட்டியலில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி வரும் நேரமாச்சு!! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?! நயினார் நாகேந்திரன் கொடுத்த அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share