சீனியர் செங்கோட்டையன் மிஸ்ஸிங்!! Why Bro?! தவெக தேர்தல் அறிக்கை குழுவால் சர்ச்சை!!
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அமைத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான சிறப்புக் குழுவை கட்சித் தலைவரும் நடிகருமான விஜய் அறிவித்துள்ளார். 12 உறுப்பினர்கள் கொண்ட இந்தக் குழுவில் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இடம்பெறாதது கட்சி வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.
விஜய் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றமும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் நோக்கமாகக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தக் குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து பொதுமக்கள், சிறு-குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள், வர்த்தக சபைகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறியும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு கிடையாது! காங்கிரஸை கைவிட்டது திமுக! விஜய் பக்கம் தாவ திட்டம்!
அவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் மக்கள் நலன் சார்ந்து வளர்ச்சி பாதையில் மாநிலத்தை கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்று விஜய் உறுதியளித்துள்ளார்.
தேர்தல் அறிக்கை குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள்: கே.ஜி. அருண்ராஜ், ஜே.சி.டி. பிரபாகர், ஏ. ராஜ்மோகன், டிஎஸ்கே மயூரி, ஏ. சம்பத்குமார், எம். அருள் பிரகாசம், ஆர். பரணிபாலாஜி, ஜே. முகமது பர்வேஸ், டிகே. பிரபு, கிறிஸ்டி பிருத்வி, தேன்மொழி பிரசன்னா, எம். சத்யகுமார் ஆகியோர். இவர்களுக்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக, அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் ஜே.சி.டி. பிரபாகர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. அதேநேரம், கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இந்தக் குழுவில் இடம்பெறாதது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது உள்கட்சி அரசியலில் புதிய சலசலப்பை உருவாக்கியிருக்கிறது என்று கூறப்படுகிறது.
தவெகவின் இந்த நடவடிக்கை 2026 தேர்தலுக்கு கட்சி தீவிரமாக தயாராகி வருவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மக்கள் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பது வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுகவுக்கு தவெக வைக்கும் வேட்டு! சைலண்டாக சம்பவம் செய்யும் விஜய்! கருத்துக்கணிப்பில் புது தகவல்!