“கோவத்தில் இப்படி முடிவெடுத்திருக்கக்கூடாது” - தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு வி.கே.சசிகலா அட்வைஸ்...!
செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது குறித்து முதல் முறையாக வி.கே.சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதா நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய சசிகலா, அங்கு உறுதிமொழி ஏற்றார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் சசிகலா. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதிமுகவை அமித் ஷா தான் வழி நடத்துகிறார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஊடகங்கள் முதலில் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்க வேண்டும். அந்தந்த கட்சி, அந்தந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அதனை எப்படி வழி நடத்த வேண்டும்?, என்ன மாதிரியான தேர்தல் வியூகங்களை வகுக்க வேண்டும்? என்றெல்லாம் தேர்தல் நெருங்கும் போது பார்த்துக்கொள்வார்கள். எனவே ஊடகங்களுக்கு நான் வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை மக்கள் பிரச்சனைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனக்கூறினார்.
இதையும் படிங்க: "நரி வலம் போனால் என்ன?, இடம் போனால் என்ன?" - செங்கோட்டையனை மறைமுகமாக சாடிய திமுக அமைச்சர்...!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, "ஒருவர் மீது கோபம் இருக்கிறது என்பதற்காக பெரிய முடிவுகளை அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் வந்தவர்கள் இதுபோலச் செய்வதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை." எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “யாரோ சொல்லி தவெகவில் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை...” - உதயநிதிக்கு நறுக் பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!