அதிமுகவை பாமக புறக்கணிக்க காரணம் இதுதானா?... அன்புமணி காதுக்கு சென்ற முக்கிய செய்தி... வெளியானது பகீர் பின்னணி...!
தர்மபுரியில் உள்ள நான்கு தொகுதிகளில், அதாவது மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் நாங்கள் அதிமுகவை வெற்றி பெற வைத்தோம்.
இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என பாமக அறிவித்துள்ளது. இந்த நிலையில், இடைத்தேர்தலில் ஆதரவளிக்க மறுத்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவை எதிர்பார்த்து அதிமுக காத்திருந்தது.
காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாமக ஆதரவு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஆதரவு இல்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நாங்கள் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும், நாங்களும் போட்டியிடப் போவதில்லை என்றும் பாமக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு ஆதரவு இல்லை? தவெகவுடன் கை கோர்க்கும் பாமக… இடைத்தேர்தலில் புதிய திருப்பம்!
இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, அதேபோல் நேற்று மாலை முதலே பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், ஐடி விங் நிர்வாகிகள், செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு எழுதி வருகின்றனர்.
நாங்கள் ஏன் அதிமுகவிற்கு இந்த இடைத்தேர்தலில் ஆதரவு கொடுக்கவில்லை என்பதற்கான காரணங்களையும் அவர்கள் பதிவு செய்து வருகின்றனர். அதில் சிலவற்றை தற்போது பகிர்ந்து கொள்ள இருக்கின்றோம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 இடங்கள் வழங்கப்பட்டன. அதுவே குறைவான தொகுதிகள் என்ற அதிருப்தி இருந்தாலும், அந்த 18 தொகுதிகளிலும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அதிமுக தரப்பில் சொல்லப்பட்டது.
ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிவில் பாட்டாளி மக்கள் கட்சி நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரத்தில், அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் சுமார் 36 இடங்கள் பாமக வலுவாக இருக்கக்கூடிய வட மாவட்டங்களில் கிடைத்த வெற்றிகளாகும்.
இந்த 47 தொகுதிகளில் 36 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு மாற்றம் முக்கிய காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
அதிமுக வெற்றி பெற்ற இடங்களை எடுத்துப் பார்த்தால், சேலம், தர்மபுரி, வேலூர் மாவட்டம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஒட்டிய பகுதிகள் என வட மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் பாமகவின் வாக்குகள் முழுமையாக அதிமுகவுக்கு மாற்றப்பட்டதன் காரணமாகவே அதிமுக வலிமை பெற்று வெற்றி பெற்றதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட பல இடங்களில் அதிமுகவின் வாக்குகள் பாமகவுக்கு மாற்றப்படவில்லை. அதன் காரணமாகத்தான் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என எண்ணுகின்றனர்.
அதிமுகவின் வாக்குகள் மட்டும் முழுமையாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றப்பட்டிருந்தால், எங்களுக்கு குறைந்தது 10 சட்டமன்ற உறுப்பினர் இடங்கள் கிடைத்திருக்கும் என்று அவர்கள் பல்வேறு கருத்துகளை தற்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கு ஆதாரமாக, தர்மபுரியில் உள்ள நான்கு தொகுதிகளில், அதாவது மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் நாங்கள் அதிமுகவை வெற்றி பெற வைத்தோம். ஆனால், நாங்கள் போட்டியிட்ட பென்னாகரம் தொகுதியில் எங்களுடைய பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் தோல்வியடைந்தார். அதற்கு காரணம் அதிமுகவின் வாக்குகள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தவிர, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் பாமக இரண்டு இடங்களில் போட்டியிட்டது. சேலம் மேற்கு, சேலம் வடக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூட பாமக வெற்றி பெறவில்லை.
தங்களுடைய சொந்த மாவட்டத்தில் கூட எங்களை வெற்றி பெற வைக்க முடியவில்லை. ஏனென்றால், எங்களுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணியாற்றவில்லை என்று பாமக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அன்புமணி அவர்களின் கட்டளையை ஏற்று பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிமுகவிற்காக உண்மையாக உழைத்தார்கள் என்றும், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நிர்வாகிகள் என ஒரு சில இடங்களில் மட்டுமே பணியாற்றியதாகவும், அனைத்து இடங்களிலும் அவ்வாறு உறுதியாகப் பணியாற்றவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு முழுமையாக பணியாற்றியிருந்தால், சோழிங்கர் தொகுதி, மயிலாடுதுறை தொகுதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் தொகுதி, உத்திரமேரூர் தொகுதி ஆகிய இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றிருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் முடிந்த உடனேயே, ஒரு வார காலத்திற்குள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி, பாமக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கியமான மாநில நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்தத் தேர்தலில் சாதக, பாதகங்கள் என்ன? நமக்கு சரியாக இருந்தது என்ன? சரியாக இல்லை என்பது என்ன? உங்களுடைய கருத்துகளை வெளிப்படையாகப் பகிருங்கள் என்று அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல மாவட்டச் செயலாளர்கள் தங்களுடைய அதிருப்திகளை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், அங்கு அதிமுகவினர் போட்டியிட்ட பல தொகுதிகளில் பாமகவினர் அதிமுகவை வெற்றி பெற வைத்திருக்கின்றனர். ஆனால், பாமக போட்டியிட்ட ஒரே தொகுதியான போளூர் தொகுதியில் அதிமுகவினர் பாமகவை வெற்றி பெற வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அங்கு மாவட்டச் செயலாளராக இருந்த ஜெயசுதா, ஆரணி தொகுதியில் போட்டியிட்ட காரணத்தால், போளூர் தொகுதியில் இருந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரையும் ஆரணி தொகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு பணியாற்ற வைத்துவிட்டதாகவும், அதனால் போளூர் தொகுதியில் அதிமுகவினர் களத்தில் பணியாற்ற ஆளில்லாமல் போனதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாக்குகள் மாற்றப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதேபோல் உத்திரமேரூர், திருப்போரூர், சோழிங்கர், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் எப்படி நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம், அதிமுகவின் எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள், எந்தெந்த நிர்வாகிகள் களத்திற்கு வரவில்லை, களத்திற்கு வந்தாலும் பெயரளவுக்கு மட்டுமே பணியாற்றினார்கள், முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்றவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இறுதியாக அன்புமணி பேசியபோது சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், குறிப்பாக மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றபோது பிரதமர் மோடியை மேடையில் அமர வைத்துக்கொண்டே, இது அதிமுக தலைமையிலான கூட்டணி என்றும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமிதான் வரப்போகிறார் என்றும் தான் முழங்கியதாகத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று வெளியில் சொன்னாலும், இது அதிமுக தலைமையிலான கூட்டணி என்று பிரதமர் முன்னிலையிலேயே தான் தெரிவித்ததாகவும் அன்புமணி கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்படி இருந்தும் நீங்கள் இவ்வளவு அதிருப்தியைத் தெரிவிக்கிறீர்கள். என்ன காரணம் என்பதை நாம் விசாரிப்போம். வரக்கூடிய தேர்தல்களில் உங்களுடைய கருத்துகளுக்கு நான் மதிப்பளிப்பேன் என்று அவர் உறுதியளித்ததாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு நாம் ஏன் சென்று ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், அன்புமணி தொண்டர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கருத்தை ஏற்று, அதிமுகவிற்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
இன்னொரு கூடுதல் தகவலையும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 2024ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்றபோது, பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டது. அதிமுக அந்தத் தேர்தலை புறக்கணித்தது.
அப்போது, அதிமுக எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியபோது, அதிமுக ஆதரவு எதுவும் கொடுக்க முடியாது என்றும், பொதுத்தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறி விலகிவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்றைக்கு விக்கிரவாண்டியில் நாங்கள் ஆதரவு கேட்டபோது நீங்கள் கொடுக்கவில்லை. இப்போது நாங்கள் மட்டும் எதற்காக இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் உங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் சில நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எனவே, அதிமுகவிற்கும் பாமகவிற்கும் கள அளவில் ஒத்துப்போகவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். 2019, 2021, 2026 என மூன்று தேர்தல்களில் இணைந்து பயணித்தும், அதிமுகவின் வாக்குகள் பாமகவிற்கு கிடைக்கவில்லை. பாமகவால் அதிமுகவிற்குத்தான் லாபம் கிடைத்தது என்று அதிமுக நிர்வாகிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
தொண்டர்களின் மனநிலையை ஏற்று அன்புமணி, அதிமுகவிற்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை அறிவித்திருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: “அரசியல் பேசாதீங்க!” தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் போட்ட கண்டிஷன்... வைரலாகும் அறிவிப்பு