×
 

விஜயுடன் பேரம் பேசுகிறார் திருமாவளவன்!! கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவை அறிவித்த பின்னும் தயங்குவது ஏன்? தமிழிசை கேள்வி!

'இரு கம்யூனிஸ்ட்களும், நானும் ஒட்டுமொத்தமாகத் தான் முடிவு எடுப்போம் என்று சொன்ன திருமாவளவன் தயங்குவது ஏன்? என்ன பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்,' என்று முன்னாள் கவர்னரும், பாஜ நிர்வாகியுமான தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: தமிழக அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில், முன்னாள் கவர்னரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் மீது கடும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வீடியோ ஒன்றில் பேசிய தமிழிசை, “இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், நானும் ஒட்டுமொத்தமாகத்தான் முடிவு எடுப்போம் எனச் சொன்ன திருமாவளவன் இப்போது ஏன் தயங்குகிறார்? என்ன பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் கூறியதாவது: “முழு எண்ணிக்கை இல்லாததால் மூன்று முறை விஜய் கவர்னரை சந்தித்தும் திருப்பி அனுப்பப்பட்டார். கவர்னர் தெளிவாகச் சொல்கிறார் – எண்ணிக்கையுடன் வாருங்கள், ஆதரவு தருகிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் எண்ணிக்கை இல்லாமல் சென்று கவர்னர் மீது பழி போடுவது நியாயமில்லை.

இதையும் படிங்க: திருமா. எப்போ வருவாரு..? ஆதரவு தருவாரு..? “ 4 மணிக்கு” விசிக வெளியிடும் முக்கிய அறிவிப்பு..!

தேர்வில் மதிப்பெண்கள் இல்லாமல் தேர்வு செய்யுங்கள் எனக் கேட்பது போலத்தான் இது. மக்களின் நம்பிக்கையைப் பெறாது. முதல்வர் ஸ்டாலின் வெளியில் விஜயை ஆதரிப்பது போல் பேசிவிட்டு, பின்னால் முட்டுக்கட்டை போடுகிறார். கம்யூனிஸ்ட்கள் ஆதரவு தருவதாகச் சொல்லிவிட்டு, பா.ஜ.க. கவர்னர் மீது அழுத்தம் கொடுப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இதில் உண்மையில்லை.

தங்களின் சுய லாபத்துக்காக முடிவுகள் எடுத்துவிட்டு, பா.ஜ.க. மீதும் கவர்னர் மீதும் பழி சுமத்துவது சரியல்ல. காங்கிரஸ் தி.மு.க. உடனான நட்பை முறித்துவிட்டு, இப்போது எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எனத் தெரியாமல் ஹைதராபாத் சென்றிருக்கிறார்கள். எல்லோரும் சுயநல அரசியல் செய்கிறார்கள்” எனத் தமிழிசை விமர்சித்தார்.

இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க., ஆட்சி அமைக்கும் முயற்சியில் கூட்டணி ஆதரவு இன்னும் உறுதியாகாத நிலையில், திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு முக்கியமானதாக மாறியுள்ளது.

தமிழிசையின் இந்த விமர்சனம், தற்போதைய அரசியல் நெருக்கடியை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது. 

இதையும் படிங்க: ஆட்சியே வேண்டாம்! யார் காலிலும் விழ தயாராக இல்லை! மீண்டும் மக்களிடமே போவேன்!! வெகுண்டெழுந்த விஜய்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share