×
 

தவெக விஜய்க்கு கூட்டணி கதவு திறந்தாச்சு! யூடர்ன் போட்டது காங்., விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள்!!

தவெக தலைவர் விஜய் முதல்வர் ஆக திமுக கூட்டணி கட்சிகள் உதவி? பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கும் முயற்சியில் முக்கிய கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடத் தயாராகி வருகிறது. 

118 உறுப்பினர்கள் தேவைப்படும் மேஜிக் எண்ணை எட்ட, தவெக தலைவர் விஜய் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐ.யு.எம்.எல். உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோர உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க கூடுதல் ஆதரவு அவசியம். இதை மனதில் கொண்டு விஜய் இந்தக் கட்சிகளுடன் தொடர்பு கொள்ளத் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, காங்கிரஸ் மேலிடம் விஜய்யுடன் அணி சேர்வதில் ஆர்வம் காட்டுவதாகவும், பேச்சுவார்த்தை ஏற்கெனவே தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் கதவைத் திறந்து வைத்துள்ளன. 

இதையும் படிங்க: விஜய்க்கு ஏறுமுகம்!! வெற்றி வேட்பாளர்களை பனையூருக்கு அழைத்து வகுப்பெடுத்த தவெக தலைவர்கள்!!

“விஜய்க்கு ஆதரவு தர மாட்டோம்” என்று இந்தக் கட்சிகளில் எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை. மாறாக, “இதுவரை விஜய் அழைக்கவில்லை” என்று நழுவிப் பேசி வருகின்றன. ஒருவேளை விஜய் நேரடியாக அழைத்தால் ஆதரவு அளிக்கும் வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.யு.எம்.எல். உள்ளிட்ட சிறிய கட்சிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக-வுக்கு கூட்டணி கட்சிகள் கதவைத் திறந்து வைத்திருப்பது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக இந்தத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த நிலையில், அதன் கூட்டணிக் கட்சிகளே விஜய்யை நோக்கி நகர்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தரப்பில் இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. விஜய் முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். அடுத்த சில நாட்களில் பேச்சுவார்த்தைகளின் முடிவு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழக அரசியலில் புதிய கூட்டணி சூழல் உருவாகி வரும் இந்த நேரத்தில், விஜய்யின் அடுத்த நகர்வு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இரு முதலமைச்சர்களுக்கு பதவி பிரமாணம்! பயங்கர பிசி மூடில் கவர்னர் அர்லேக்கர்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share