பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம்?! களத்திற்கே சென்று எதிர்த்த விஜய்! முதல்வரானதும் எடுக்கும் முடிவு?!
தமிழக வெற்றிக் கழகம், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளதால், பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுமா அல்லது தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் திட்டமிடப்பட்டுள்ள இரண்டாவது விமான நிலையத் திட்டத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில், இத்திட்டத்தை ரத்து செய்யுமா அல்லது தொடருமா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னை மீனம்பாக்க விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரண்டாவது விமான நிலையம் அவசியம் என கடந்த திமுக அரசு முடிவு செய்தது. பரந்தூரில் பொது-தனியார் கூட்டு முயற்சியில் (PPP) இத்திட்டத்தை செயல்படுத்த டிட்கோ நிறுவனத்தை நியமித்தது. மொத்தம் 29,150 கோடி ரூபாய் செலவில் 5,320 ஏக்கர் நிலம் தேவைப்படும் இத்திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியும் கிடைத்துவிட்டது.
இதுவரை 1,500 ஏக்கருக்கும் மேல் நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், விவசாய நிலங்கள் பறிபோவதால் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 20 கிராமங்கள் பாதிக்கப்படும் என்பதால் போராட்டங்கள் தொடர்ந்தன.
இதையும் படிங்க: இம்மி பிசறாத கணிப்பு!! சொல்லி அடித்த செய்கை!! விஜய் Good Book-கில் இடம்பிடித்தார் ஓய்வு பெற்ற டிஜிபி ரவி!!
2025 ஜனவரியில் தவெக தலைவர் விஜய் பரந்தூருக்கு நேரில் சென்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், மக்களின் குரலுக்கு செவி சாய்ப்போம் என உறுதியளித்திருந்தார். தேர்தல் காரணமாக நிலம் எடுப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
தற்போது தவெக ஆட்சி அமைய உள்ள நிலையில், இத்திட்டம் ரத்து செய்யப்படுமா அல்லது மாற்று இடத்தில் செயல்படுத்தப்படுமா என்பது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது. மத்திய அரசின் அனுமதிகள் ஏற்கனவே கிடைத்திருப்பதால், திட்டத்தை ரத்து செய்வது சிக்கலானதாகவும், தொடர்வது வாக்குறுதிக்கு மாறானதாகவும் பார்க்கப்படுகிறது.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழு தலைவர் ஜி.சுப்பிரமணி கூறுகையில், “எங்கள் கிராமங்களை அழிக்கும் இந்தத் திட்டத்தை விஜய் ஆட்சியில் நிச்சயம் நிறுத்துவார். எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது” என்றார்.
மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில், “ஏற்கனவே பல ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. திட்டத்தைத் தொடர்வதா அல்லது நிறுத்துவதா என்பது புதிய அரசின் முடிவு” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் வளர்ச்சிக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை என்பதில் உள்ள சர்வதேச முக்கியத்துவத்துக்கும், உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைக்கும் இடையே சமநிலை பேணும் சவாலான முடிவை புதிய முதல்வர் விஜய் எடுக்க உள்ளார். இந்த முடிவு தமிழக அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒத்த ஓட்டில் வென்ற தவெக எம்.எல்.ஏ பதவியேற்பில் சிக்கல்?! பெரிய கருப்பன் தொடுத்த வழக்கு!