வங்கதேசத்திற்கு ஜாக்பாட்: டி20 உலக கோப்பையில் விளையாடாவிட்டாலும் ஐசிசி-யின் அதிரடி சலுகைகள்!
“2031-க்குள் வங்கதேசத்தில் ஐசிசி தொடர்; அபராதம் ஏதும் இல்லை” - ஐசிசி தலைமை நிர்வாகி சஞ்ஜோக் குப்தா நெகிழ்ச்சி; வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு (BCB) மாபெரும் நிம்மதி!
டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்குப் பயணம் செய்ய மறுத்ததால் தொடரிலிருந்து நீக்கப்பட்ட வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு (BCB), சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மிகப் பெரிய ஆறுதலை அளித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகப் போட்டிகளில் பங்கேற்காத வங்கதேசத்தின் மீது எந்தவிதமான நிதி அல்லது நிர்வாக ரீதியானத் தடைகளும் விதிக்கப்படாது என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐசிசி-யின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்ஜோக் குப்தா இது குறித்துப் பேசுகையில், "டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணி இல்லாதது வருந்தத்தக்கது. இருப்பினும், இது ஒரு முக்கிய கிரிக்கெட் நாடான வங்கதேசத்தின் மீது ஐசிசி கொண்டுள்ள நீடித்த அர்ப்பணிப்பைச் சிதைக்காது. 200 மில்லியனுக்கும் அதிகமான கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட வங்கதேசத்தில், விளையாட்டு வளர்வதையும் வீரர்களுக்கான வாய்ப்புகள் வலுப்படுத்தப்படுவதையும் ஐசிசி தொடர்ந்து உறுதி செய்யும்," எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விளையாட்டின் நேர்மைக்கு எதிரானது! இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!
வங்கதேச ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, 2028 மற்றும் 2031-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்டக் காலத்தில் ஒரு பெரிய ஐசிசி தொடரை (ICC Event) நடத்தும் வாய்ப்பு வங்கதேசத்திற்கு வழங்கப்பட உள்ளது. இது 2031-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாகவே வங்கதேசத்தில் நடத்தப்படும் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு முக்கியத் தொடரிலிருந்து ஒரு நாடு தன்னிச்சையாக விலகினால் அபராதம் விதிக்கப்படும். ஆனால், தற்போதையச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் மீது நிதி, விளையாட்டு அல்லது நிர்வாக ரீதியான எந்த அபராதமும் விதிக்கப்படாது.
வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி ஏற்கனவே சி பிரிவில் (Group C) சேர்க்கப்பட்டுத் தொடர் நடைபெறுகிறது. பிசிபி (PCB) மற்றும் பிசிஜி (BCB) ஆகியவற்றுடன் நடத்திய ஆக்கபூர்வமானப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்தச் சுமுக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவுக்கு வர மறுத்ததால் வங்கதேச அணி டி20 உலகக் கோப்பையிலிருந்து நீக்கப்பட்டது. இவர்களுக்கு ஆதரவாகப் பாகிஸ்தானும் தொடரைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது பாகிஸ்தான் விளையாடச் சம்மதித்துள்ள நிலையில், வங்கதேசத்திற்கும் எதிர்காலத் தொடர்களை நடத்தும் வாய்ப்பை வழங்கி ஐசிசி சமரசம் செய்துள்ளது.
இதையும் படிங்க: விளையாட்டின் நேர்மைக்கு எதிரானது! இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!