×
 

விஸ்வரூபம் எடுத்த ஜெகதீசன்! அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா ‘A’ அணி அபார வெற்றி!

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் அதிரடி, 104 ரன்கள் குவித்து தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் சாதனை, 38 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்கா தோல்வி.

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை 2026 தொடருக்கானப் பயிற்சி ஆட்டத்தில், அமெரிக்காவுக்கு (USA) எதிரானப் போட்டியில் இந்தியா ‘A’ அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழக வீரர் நாராயண் ஜெகதீசனின் அதிரடி சதம் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்தியா ‘A’ அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய நாராயண் ஜெகதீசன், அமெரிக்கப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். வெறும் 55 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதையும் படிங்க: "T20 World Cup-ல் ட்விஸ்ட்!" வேற ஊர்ல வைங்க! - இந்தியா வராமல் அடம் பிடிக்கும் வங்கதேசம்.. ஷாக் ஆன ICC!

இந்திய ‘A’ அணியின் கேப்டன் ஆயுஷ் பதோனி, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள திலக் வர்மா 38 ரன்கள் எடுத்துத் தனது உடற்தகுதியை நிரூபித்தார். 239 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய அமெரிக்க அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களுக்குச் சுருண்டது. அமெரிக்க அணி சார்பில் ஆண்ட்ரீஸ் கவுஸ் (44) மற்றும் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி (41) ஆகியோர் ஓரளவு ஈடுகொடுத்து ஆடினர்.

இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளையும், நமன் தீர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர்.

இந்தியா ‘A’ அணி தனது அடுத்தப் பயிற்சி ஆட்டத்தில் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி பெங்களூருவில் நமீபியா அணியை எதிர்கொள்கிறது. அதேவேளையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய முதன்மை அணி, தனது ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் பிப்ரவரி 4-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது.

இதையும் படிங்க: விளையாட்டின் நேர்மைக்கு எதிரானது!  இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share