×
 

தாய்ப்பால் குடித்துவிட்டு தூங்கிய 10 மாத குழந்தை உயிரிழப்பு... தாய் சொன்ன பகீர் காரணம்...!

குழந்தையை கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கீழ்வாணியைச் சேர்ந்த கார்த்திக் – சரோஜினி தம்பதியினருக்கு தருண் என்ற 10 மாத ஆண் குழந்தை இருந்தது.

நேற்று காலை, குழந்தைக்கு ஒன்பதாவது மாதத்திற்கான தடுப்பூசியை செலுத்துவதற்காக மொடச்சூர் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மையத்திற்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஒரு தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன், மேலும் ஒரு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று சுகாதாரப் பணியாளர்கள் தெரிவித்ததையடுத்து, சீதாலட்சுமிபுரம் பகுதியில் உள்ள மற்றொரு மையத்தில் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திய பின்னர் வீட்டிற்கு திரும்பிய குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பெற்றோர் குழந்தையை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். இருப்பினும், குழந்தைக்கு மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையும் படிங்க: CM கர்நாடகா செல்கிறாரா... இல்லையா..? விஜயின் முடிவு என்ன.? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்..!

இதையடுத்து, குழந்தையை கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது குழந்தை நலமாக இருப்பதாகவும், வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வருமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு திரும்பிய குழந்தை இரவில் வழக்கம்போல் விளையாடியதாகவும், தூங்குவதற்கு முன் தாய்ப்பால் குடித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது தடுப்பூசி செலுத்தப்பட்ட இடத்தில் தொட்டவுடன் குழந்தைக்கு வலி ஏற்பட்டதால் அது அழுததாகவும், அதனைத் தொடர்ந்து தாய் அந்த இடத்தில் எண்ணெய் தடவி குழந்தையை தூங்க வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை, குழந்தையின் படுக்கையைப் பார்த்த தாய், குழந்தையை எழுப்ப முயன்றபோது எந்த அசைவும் இல்லாததையும், மூச்சு விடாத நிலையிலும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆரோக்கியமாக இருந்த 10 மாத குழந்தைக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், இரவு வரை நலமாக இருந்த குழந்தை அதிகாலையில் உயிரிழந்துள்ளது பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"குழந்தையின் உயிரிழப்புக்கு மூச்சுத் திணறல் காரணமா அல்லது தடுப்பூசி செலுத்தப்பட்டது காரணமா என்பது குறித்து மருத்துவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், நேற்று செலுத்தப்பட்ட தடுப்பூசி விவரம் குழந்தையின் தடுப்பூசி அட்டையில் பதிவு செய்யப்படாததும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது," என்று குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் விளக்கம் அளிக்கையில், "ஒன்பதாவது மாத தடுப்பூசி செலுத்துவதால் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவது வழக்கமல்ல. வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம். குழந்தையின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே உறுதியாகத் தெரியவரும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வலை வீசி தேடும் காவல்துறை... செந்தில் பாலாஜி தலைமறைவா?... அடுத்தடுத்து வெளியாகும் திடுக் தகவல்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share