×
 

“டீசலுக்கு குட்பை… 3 மாதத்தில் 1000 மின்சார பஸ் ரெடி! – அமைச்சர் சிவசங்கர்

தமிழகத்தில் 3 மாதங்களுக்குள் கூடுதலாக 1000 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி (VIT) பல்கலைக்கழகத்தில் மூன்றாவது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பங்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை விஐடி வேந்தர் திரு. விசுவநாதன் தலைமையில், தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு. சிவசங்கர் மற்றும் அமெரிக்காவின் எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தின் பேராசிரியரும் நோபல் விஞ்ஞானியுமான திரு. மவுங்கி பவெண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.

இவ்விழாவில் பல்கலைக்கழக துணைத் தலைவர் சேகர், சந்தியா பெண்டாரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் 20 நாடுகளைச் சேர்ந்த 300 அயல்நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பல விஞ்ஞானிகளும் பங்கேற்கின்றனர். இன்று துவங்கிய இம்மாநாடு நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சிவசங்கர் அவர்கள், தமிழக அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முன்னெடுப்புகளைப் பட்டியலிட்டார்.

தமிழக அரசு ஆராய்ச்சி கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது. ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் ரூ. 65,000 வரை உதவித்தொகையாக வழங்கி எதிர்கால விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதாகத் தெரிவித்தார். முனைவர் பட்ட ஆராய்ச்சிக் கல்விக்காக ஓராண்டிற்கு ஒரு மாணவருக்கு ரூ. 1.50 லட்சம் வரையில் உதவித்தொகையை அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் முனைவர் பட்டப் படிப்பு ஆராய்ச்சி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மாணவிகளுக்காக விலையில்லாப் பேருந்துப் பயணம், புதுமைப் பெண் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைத் தமிழக அரசு வழங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழப்பு: 'கல்வியில் சிறந்த தமிழ்நாடா? அன்புமணி கண்டனம்! 

2021-2022 உயர் கல்வி கணிப்பின்படி, தமிழகத்தில் 15,400 பெண்கள் முனைவர் பட்டம் பயின்று வருகின்றனர். ஆண்கள் 13,457 பேர் முனைவர் பட்டம் பயின்று வருகின்றனர். மொத்தம் 28,867 பேர் முனைவர் பட்டம் பயின்று வருவதன் மூலம், கல்வியில் பாலின பாகுபாடுகளைக் கலைந்துள்ளதாகவும் தமிழகத்தை அறிவிலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றப் பாதையில் கட்டமைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழகப் போக்குவரத்துத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டுவந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மின்சாரப் பேருந்துகளை இயக்கும் வகையில் தமிழகம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சோலார் ஆற்றல் மூலம் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டு வருவதாகவும், இதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

சென்னையில் தற்போது மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். மக்கள் பயன்பாட்டிற்காக 225 மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்திய நிலையில், கூடுதலாக இன்னும் மூன்று மாதங்களில் 1000 மின்சாரப் பேருந்துகளை இயக்கவுள்ளோம். நானோ தொழில்நுட்பங்கள், பேட்டரி உற்பத்தி, சோலார் ஆற்றல் மற்றும் இயற்கை ஹைட்ரஜன் வாயு உற்பத்தியிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று அவர் கூறினார்.

இறுதியாக மாணவர்களை நோக்கிப் பேசிய அமைச்சர், "மாணவர்களாகிய உங்களின் கண்டுபிடிப்புகள் மனித ஆற்றலை மேம்படுத்துவதாகவும், மனித குலத்திற்குப் பயனளிப்பதாகவும் இருக்க வேண்டும். உங்களின் கண்டுபிடிப்புகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்" என்று உறுதி அளித்தார்.

இதையும் படிங்க:  காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் இனி 'ஆர்டர்லிகள்' இல்லை - பொறுப்பு டி.ஜி.பி அதிரடி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share