அரசு பள்ளி கழிவறையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்... மயக்க மருந்து கொடுத்து மர்ம கும்பல் செய்த பயங்கரம்...!
அரசு பள்ளியில் மயக்க மருந்து கொடுத்து 10ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வந்தலூர் அருகே உள்ள அரசுப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், மாணவி ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் கழிவறைக்குச் சென்றபோது இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு முன்பாக மாணவிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாணவி சுயநினைவை இழந்த பின்னர், அங்கு வந்த மர்ம நபர்கள் அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பள்ளிக் கழிப்பறையில் மயக்க நிலையில் இருந்த மாணவியை சக மாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனிடையே, அரசுப் பள்ளியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை காவல்துறை மூடி மறைக்க முயற்சிப்பதாகவும் சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மதுராந்தகத்தில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதால், இந்த விவகாரத்தை மறைக்க முயற்சி நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளியில் மாணவர்களின் கழிப்பறை முன்புறத்தில் அமைந்துள்ள நிலையில், மாணவிகளின் கழிப்பறை புதர்கள் நிறைந்த பகுதியில் அமைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதி பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, மாணவிகளின் ஓய்வறையும் புதர்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளதாகவும், ஏரிக்கரையை ஒட்டியுள்ளதால் பள்ளி வளாகத்திற்குள் வெளியிலிருந்து எளிதாகக் குதித்து நுழையக்கூடிய சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிவறை பாதுகாப்பான இடத்தில் இல்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கூட்டு பாலியல் தொல்லை... சிறுமியை சீண்டிய சிறுவர்கள் உட்பட 5 பேரை கொத்தாக தூக்கிய காவல்துறை...!