அமலாக்கத்துறை கையில் சிக்கிய குடுமி..! 2 நாள் ரெய்டால் ஆட்டம் காணும் டாஸ்மாக் ஊழல்..!
சென்னையில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நேற்று இரவு நிறைவடைந்தது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 'டாஸ்மாக்' மதுபான விற்பனை, கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, கடந்த மார்ச் 6 முதல், 8ம் தேதி வரை, சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம் மற்றும் எஸ்.என்.ஜே., உள்ளிட்ட மதுபான நிறுவனங்கள், மதுபான ஆலைகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்து, 'டெண்டர்' ஒதுக்கீடு ஆணைகள், மதுபான விலை நிர்ணய கடிதங்கள், மதுக் கூடம் உரிமம் வழங்குவது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர். அத்துடன், கடந்த நான்கு ஆண்டுகளில், மதுபான ஆலைகளில் இருந்து கடைகளுக்கு மது பாட்டில்களை எடுத்துச் செல்வதற்கான வாகன டெண்டர் ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல, பாட்டிலுக்கு, 10 - 30 ரூபாய் வரை கொள்முதல் விலையை உயர்த்தி பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் கைப்பற்றினர். அதன் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விசாகன், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மொத்த விற்பனை பிரிவு பொது மேலாளர் சங்கீதா, கொள்முதல் மற்றும் விற்பனை பிரிவு துணை பொது மேலாளர் ஜோதிசங்கர், சில்லரை விற்பனை பிரிவு பொது மேலாளர் ராமதுரைமுருகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: இது 19வது முறை..! அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்.. சோதனை தீவிரம்..!
மூவரின் மொபைல் போன்கள், இ - மெயில் தகவல்களையும் ஆய்வு செய்தனர். சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, விசாகன் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் என்றும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு மற்றும் 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது. அமலாக்கத்துறை விசாரணையை தொடரலாம் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவரது வீட்டிற்கு வெளியே மறைவான இடம் ஒன்றில், ஆவணங்கள் கிழித்து எறியப்பட்டு கிடந்தன. அவற்றையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். பார் டெண்டர்' விவகாரம் தொடர்பாக, 'வாட்ஸாப் சாட்டிங்' மற்றும் இ - மெயில் தகவல் பரிமாற்றம் குறித்து, 'ஸ்கிரீன் ஷாட்' எடுக்கப்பட்டு, அதை காகித வடிவில் பிரின்ட் எடுத்து உள்ளனர். அவற்றை தான் கிழித்து வீசி எறிந்துள்ளனர் என்பதை கண்டறிந்தனர்.
இந்த ஆவணங்கள், விசாகன் மொபைல் போன் மற்றும் இ - மெயில் முகவரியில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், விசாகனை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அமலாக்கத்துறையினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாகனின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போது, அவரது மனைவி மற்றும் மகனிடமும், அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
அதேபோல, டாஸ்மாக் ஊழல் தொடர்பாக, சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள, எஸ்.என்.ஜே., மதுபான நிறுவனத்தின் அலுவலகம், அண்ணா சாலையில் தொழிலதிபர் தேவகுமார் வீடு, பெசன்ட் நகரில் ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் வீடு, அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள தொழிலதிபர் மேகநாதன் வீடு உட்பட, 10 இடங்களிலும் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேனாம்பேட்டையில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
2-வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நீடித்தது. விசாகனை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் மற்றும் சினிமா தயாரிப்பாளர் பாஸ்கர் வீடுகளில் 2வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நேற்று இரவு நிறைவடைந்தது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அறிக்கைகள் வெளியாகும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கஞ்சா விற்பதில் போட்டி.. சரமாரியாக வெட்டிக்கொலை.. நண்பனின் கதையை முடித்த மூவர்..!