வேலை நேரத்தில் தூக்கம்.. 2 ரயில் கேட் கீப்பர்கள் டிஸ்மிஸ்..! தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு..!
லெவல் கிராசிங் பணியின்போது தூங்கிய 2 ரெயில்வே கேட் கீப்பர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே நேற்று முன்தினம் காலை 7:40 மணியளவில் நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்து, மூன்று பள்ளி மாணவர்களின் உயிரைப் பறித்து, பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியின் வேன், ஆளில்லா ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதில் இந்த கோர விபத்து அரங்கேறியது. வேன் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு முற்றிலும் உருக்குலைந்தது.
இந்த விபத்தில், சாருமதி (16) மற்றும் விமலேஷ் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சாருமதியின் சகோதரர் செழியன் (15), புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. வேன் ஓட்டுநர் சங்கர் (47), மாணவர்கள் விஷ்வேஷ் (16), நிவாஸ் (13) ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து விபத்திற்கு காரணமாக, கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியம் சுட்டிக்காட்டப்பட்டது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ், ரயில் வருவதை அறிந்து கேட்டை மூடியதாகவும், ஆனால் வாகன ஓட்டிகளின் அழுத்தத்தால் மீண்டும் திறந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு மாறாக, வேன் ஓட்டுநர் சங்கர், கேட் திறந்திருந்ததாகவும், பங்கஜ் அங்கு இல்லை என்றும் தெரிவித்தார். மாணவர் விஷ்வேஷ், விபத்துக்குப் பிறகும் கேட் கீப்பர் வரவில்லை என குற்றம்சாட்டினார். பொதுமக்கள் ஆத்திரத்தில் பங்கஜைத் தாக்க, போலீசார் அவரை மீட்டு, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே தெற்கு ரயில்வே, பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து, விபத்துக்கு மன்னிப்பு கோரியது.
இதையும் படிங்க: நாடே அழுதப்போ கொண்டாட்டம் ஒரு கேடா! ஏர் இந்தியா ஊழியர்களின் தரம் கெட்ட செயலால் அதிர்ச்சி!
இந்த விபத்தை தொடர்ந்து செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டுக்கு தமிழரை தான் கேட் கீப்பராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி திருத்தணி பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 33) என்பவர் புதிய கேட் கீப்பராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மாற்று கேட் கீப்பராக கேரளாவை சேர்ந்த பிஜூ என்பவர் உள்ளார். புதிய கேட் கீப்பர் நேற்று முதல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அரக்கோணம்-செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் லெவல் கிராசிங் பகுதிகள் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பணியின் நேரத்தில் கேட் கீப்பர்களான கார்த்திகேயன் மற்றும் ஆஷிஷ் குமார் ஆகியோர் வேலையை செய்யாமல் தூங்கி கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக கேட் கீப்பர்கள் பணியின் போது உறங்கினால் அவர்களை பணியில் இருந்து நீக்கும்படி தெற்கு ரெயில்வே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உள்ளாட்சியில் நல்லாட்சியா? கோர அரசின் குடும்ப ஆட்சி... விளாசிய இபிஎஸ்..!