"எங்க நின்னாலும் நான் ஜெயிப்பேன்!" - 2026 தேர்தல் களம் குறித்து விஜயபிரபாகரன் அதிரடி முழக்கம்!
“சாத்தூர், அருப்புக்கோட்டை, திருமங்கலம் என எங்கு நின்றாலும் வெற்றி நிச்சயம்!” - தொண்டர்கள் உற்சாகம்!
தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜயபிரபாகரன் அவர்கள் இன்று விருதுநகர் பகுதியில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் தேமுதிகவிற்கும் மக்களுக்கும் ஒரு பொற்காலமாக அமையும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் மற்றும் தொண்டர்களிடையே பேசிய அவர், மக்களின் ஆதரவு எனக்குத் தெரியும்; அதனால் எந்தத் தொகுதியில் நின்றாலும் நான் ஜெயித்துவிடுவேன் என்று நினைக்கிறேன் எனத் தனது தேர்தல் வெற்றி குறித்து அதிரடியாகப் பேசினார். குறிப்பாகச் சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல் மற்றும் திருமங்கலம் என அனைத்து இடங்களிலும் போட்டியிட வேண்டும் என மக்கள் தன்னிடம் விருப்பம் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார். தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்துப் பேசிய அவர், "நான் நிக்கிறேனா இல்லையா என்று என்னால் சொல்ல முடியாது; கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் முடிவெடுத்துதான் அதனை அறிவிக்க வேண்டும்" என்று தெளிவுபடுத்தினார். ஒரு மகனாக அம்மாவைத் தாண்டி, ஒரு தொழில்துறையில் கட்சியின் பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்றத் தயார் என்றும் அவர் கூறினார்.
கேப்டன் விட்டுப்போன பணியைத் தொடர எனக்கும், என் அம்மாவுக்கும், தம்பி சண்முக பாண்டியனுக்கும் பொறுப்பு ஜாஸ்தியாக இருக்கிறது என்று குறிப்பிட்ட விஜயபிரபாகரன், கேப்டன் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என்றும், 2026 தேர்தல் தேமுதிகவிற்கு ஒரு நல்ல தேர்தலாக இருக்கும் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது நமக்கான தேர்தல் இல்லை, மக்களுக்கான தேர்தல்; மக்களின் உரிமையை மீட்கவே 'மக்கள் உரிமை மீட்பு மாநாட்டை' நடத்தினோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது தனக்குக் கிடைத்துள்ள பாசிட்டிவ் எனர்ஜி ஆயிரம் மடங்கு பலத்தைத் தருவதாகவும், முரசு சத்தம் கண்டிப்பாக மீண்டும் முழங்கும் என்றும் அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: "கூட்டணிப் பேச்சு இல்லை, வெறும் தேநீர் தான்!" - சுதீஷ் சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்.
இதையும் படிங்க: அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி இறுதி வடிவம்: தே.மு.தி.க., அ.ம.மு.க.வுடன் பியூஷ் கோயல் இன்று பேச்சு!