24 மணி நேரத்தில் அதிரடி முடிவு.. என்ரிகாவின் 11 மதுபான வகைகளுக்கான தடை நீக்கம்!!
என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளை மீண்டும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் பிரபலமாக விற்பனையாகும் என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 11 வகையான மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விற்பனைத் தடை, உத்தரவிட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட பிராண்டுகளின் சில்லறை விற்பனையும் கிடங்கு விநியோகமும் உடனடியாக மீண்டும் தொடங்கியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் அமைந்துள்ள என்ரிகா நிறுவனத்தின் உற்பத்தி வளாகத்தில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தென் மண்டல அதிகாரிகள் ஆகஸ்ட் 11ம் தேதி தீவிர ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில், தயாரிப்புகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இயற்கை சமமான மற்றும் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் (Natural Identical and Artificial Flavouring Substances) சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, FSSAI ஆகஸ்ட் 11 அன்று 10 பிராந்தி வகைகள் மற்றும் ஒரு ரம் வகை உள்ளிட்ட 11 பிராண்டுகளையும் சந்தையிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெறப் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் ஆர். கஜலட்சுமி ஐஏஎஸ் வழிகாட்டுதலின்படி, டாஸ்மாக் மேலாண் இயக்குநர் கே. நந்தகுமார் ஆகஸ்ட் 13 அன்று அனைத்து மண்டல, மாவட்ட மற்றும் டிப்போ மேலாளர்களுக்கும் அவசரச் சுற்றறிக்கை அனுப்பினார்.
இதையும் படிங்க: சென்னையில் நாளை அண்ணாமலை தலைமையில் பிரமாண்ட பேரணி! வீ த லீடர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அதில், VSOP எக்ஸ்ஷா கோல்ட் பிராந்தி, லூயிஸ் வெர்னான்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டொவல்ஸ் VSOP பிராந்தி, நம்பர் 1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி, மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ ஃபைன் பிராந்தி, என்ரிகா VSOP செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி மற்றும் என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் ஆகியவற்றை சில்லறைக் கடைகள், FL-2 மற்றும் FL-3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளுக்கு விநியோகிப்பதையும் விற்பனை செய்வதையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
மாநிலம் முழுவதும் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட கடைகளிலும் 43 டிப்போக்களிலும் இந்தப் பிராண்டுகளின் இருப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், குறுகிய கால இடைவெளியில் நிலைமை மாறியது. FSSAI தென் மண்டல அலுவலகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் பிரிவு 36(3)(b)-ன் கீழ் ஆகஸ்ட் 11-ஆம் தேதி விதித்த தடை உத்தரவை ஆகஸ்ட் 14 அன்று உடனடியாகத் திரும்பப் பெற்றதாகத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ஆணையர் கஜலட்சுமி டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்குக் கடிதம் எழுதி, தடையை நீக்க அறிவுறுத்தினார்.
அதன்படி டாஸ்மாக் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டு, கிடங்குகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொருட்களை மீண்டும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகளைத் தொடங்கியுள்ளது.இந்த விரைவான மாற்றத்தால், நுகர்வோர் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டிருந்த இடைவெளி குறுகிய காலத்திலேயே சரிசெய்யப்பட்டுள்ளது.
என்ரிகா நிறுவனம் டாஸ்மாக்கிற்கு 20-க்கும் மேற்பட்ட வகை மதுபானங்களை வழங்கி வரும் நிலையில், இந்த 11 பிராண்டுகளும் சாதாரண மற்றும் நடுத்தர வரம்பில் அதிகம் விற்பனையாகும் வகையைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தடை நீக்கப்பட்டதால், மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இந்தப் பிராண்டுகளின் விற்பனை மீண்டும் முழுவீச்சில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை இனி அமெரிக்காவுக்கு சொந்தம்! ஈரானை வீழ்த்தியதும் அடுத்த அதிரடி! ட்ரம்ப் சூசகம்!