×
 

சர்ரென்று சரிந்த மாநில அரசியல் கட்சிகளின் வருவாய்!! ஒரே ஆண்டில் ரூ.1,270 கோடி சரிவு!

கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், 36 மாநில அரசியல் கட்சிகளின் மொத்த வருவாய், முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில், 51 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது.

சென்னை: கடந்த 2024-25 நிதியாண்டில் நாட்டின் 36 மாநில அரசியல் கட்சிகளின் மொத்த வருவாய் முந்தைய ஆண்டை விட 51.57 சதவீதம் குறைந்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த கட்சிகள் தங்கள் வருமானத்தை விட அதிக தொகையை செலவு செய்துள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ADR அமைப்பு, தேர்தல் ஆணையத்தின் தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் 36 மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாய் 1,192.94 கோடி ரூபாய் மட்டுமே. முந்தைய 2023-24 நிதியாண்டில் இது 2,463.17 கோடி ரூபாயாக இருந்தது. அதாவது 1,270.23 கோடி ரூபாய் (51.57%) வருமானம் குறைந்துள்ளது.

ஆனால் இந்த 36 கட்சிகளின் மொத்த செலவினம் 1,433.07 கோடி ரூபாயாக உள்ளது. இது அவர்களின் வருவாயை விட 240.12 கோடி ரூபாய் (20 சதவீதம்) அதிகம். 21 கட்சிகள் தங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்துள்ளன.

இதையும் படிங்க: தவெகவின் முதல் அமைச்சரவை கூட்டம்! முதல்வர் விஜய் அரசின் முழுமுதல் பட்ஜெட்! எகிறும் எதிர்பார்ப்பு!

வருமானத்தில் முன்னிலை வகித்த கட்சிகளில் தெலுங்கு தேசம் கட்சி 228.31 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது (19.14%). அடுத்த இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் (219.35 கோடி) மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (140.39 கோடி) உள்ளன. செலவினத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 340.20 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.

தன்னார்வ நன்கொடைகளே இந்த கட்சிகளின் முக்கிய வருமான ஆதாரமாக தொடர்கிறது. மொத்த வருவாயில் 58.88 சதவீதம் (702.36 கோடி) நன்கொடைகள் மூலம் வந்துள்ளது. 15 கட்சிகள் மட்டுமே செலவுக்குப் பிறகு கையிருப்பை வைத்துள்ளன. அதில் தெலுங்கு தேசம் கட்சி 166.98 கோடியுடன் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க. 35.86 கோடி கையிருப்பு வைத்துள்ளது.

அரசியல் கட்சிகளின் நிதி நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என ADR வலியுறுத்தியுள்ளது. இந்த அறிக்கை அரசியல் கட்சிகளின் நிதி நிர்வாகம் குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திமுக மாவட்ட செயலாளர்கள் அட்ராசிட்டி ஓயவில்லை!! தோல்விக்கான காரணத்தை அடுக்கும் கட்சி நிர்வாகிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share