×
 

₹5 கோடி கொள்ளை… அபராதம் ₹5 லட்சமா? - கனிம மாஃபியாக்களை வெளுத்த உயர்நீதிமன்றம்

தமிழக முழுவதும் கனிம வள கொள்ளை தடுப்பதற்கு உரிய ஆய்வுகளை மேற்கொள்ளத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்கத் தவறும் அரசு அதிகாரிகள் மற்றும் மாஃபியாக்களாகச் செயல்படும் கொள்ளையர்களுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று மிகக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. நிலங்களை ஆக்கிரமித்துக் கனிம வளங்கள் திருடப்படுவதாக நடேசன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர்.

மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையைத் தடுப்பது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் நேரடிப் பொறுப்பு என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அரசியல் மற்றும் பண பலத்தைக் கொண்டு கனிம வளக் கொள்ளை கும்பல் ஒரு 'மாஃபியா' போலச் செயல்படுகிறது. இது அரசின் நிர்வாகத்தையே பாதிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு, வெறும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கப்போகிறது?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதிகாரிகளின் தற்போதைய நடவடிக்கை போதுமானதாக இல்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: “டீசலுக்கு குட்பை… 3 மாதத்தில் 1000 மின்சார பஸ் ரெடி! – அமைச்சர் சிவசங்கர்

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள், பொதுச் சொத்துக்களான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல" என்று நீதிபதிகள் சாடினர். மேலும், சட்டவிரோதக் கொள்ளையைத் தடுக்க அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

கனிம வளக் கொள்ளை தொடர்பாகத் துணிச்சலாகப் புகார் அளிக்கும் பொது மக்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்குரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தகவல் கொடுப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பின்வரும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 1,439 பகுதிகளில் சட்டவிரோதக் கனிமத் திருட்டு கண்டறியப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களையும் ஜி.பி.எஸ் (GPS) மூலம் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கனிம வளத் திருட்டைத் தடுப்பதற்கான முழுமையான புதிய நடைமுறைகள் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழப்பு: 'கல்வியில் சிறந்த தமிழ்நாடா? அன்புமணி கண்டனம்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share