#BREAKING: 1995 & 2002 பேட்ச் அதிகாரிகளுக்குப் புத்தாண்டுப் பரிசு! 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு!
தமிழக அரசு நிர்வாகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கித் தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக நிர்வாக இயந்திரத்தின் முதுகெலும்பாக விளங்கும் 1995-ஆம் ஆண்டு ஐஏஎஸ் (IAS) பிரிவைச் சேர்ந்த 7 மூத்த அதிகாரிகளுக்குத் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு (Chief Secretary Grade) பதவி உயர்வு வழங்கித் தமிழக அரசு இன்று அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்தப் பதவி உயர்வுகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுத் துறை இன்று வெளியிட்டுள்ள அரசாணையின்படி, தற்போது பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றி வரும் 7 மூத்த அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக (Additional Chief Secretary) தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். இதன்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் ஆர்.ஜெயா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார், டிட்கோ (TIDCO) தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா ஆகியோருக்கு இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்த செவிலியர்கள் போராட்டம்: 1000 பேருக்கு முதற்கட்டமாக பணி நிரந்தரம்! - தமிழக அரசு அறிவிப்பு!
மேலும், தமிழக அரசின் நிதித் துறைச் செயலாளர் டி.உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன் மற்றும் தற்போது மத்திய அரசுப் பணியில் இந்தியத் தலைமை நில அளவையாளராக (Surveyor General of India) பணியாற்றி வரும் ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானா ஆகியோரும் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். இந்தப் பதவி உயர்வுக்காகத் தற்காலிகமாகப் புதிய பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசுடன் மல்லுக்கட்டும் ஜாக்டோ - ஜியோ! ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு!
இதேபோல், 2002-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த 7 அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர்களாக (Principal Secretary) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் சமயமூர்த்தி, முதலமைச்சரின் தனிச் செயலாளர் சண்முகம், பொதுத்துறைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர், சமூக நலத்துறைச் செயலாளர் ஜெய் ஸ்ரீ முரளிதரன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி வைத்தியன் உள்ளிட்டோருக்கு இந்த உயர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதவி உயர்வுகள் அனைத்தும் வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாற்றங்கள், வரும் புத்தாண்டில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதில் புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.