பாஜக அரசுக்கு சம்மட்டி அடி.. அமலாக்கத்துறை அக்கப்போர்களுக்கு முடிவு.. குஷியான ஆர்.எஸ்.பாரதி..!
அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பாஜகவின் விமர்சனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை செய்தது. அப்போது சோதனையின் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடா்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் விசாகன் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே இந்த சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் வழக்குகளை தள்ளுபடி செய்தது. மேலும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: முக்கிய புள்ளிகளுக்கு செக்..! சென்னையில் பல இடங்களில் ED ரெய்டு..!
இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நீதிபதி ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அமலாக்கத் துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது, வரம்புமீறி செயல்படுகிறது. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மீது விசாரிக்கலாம், ஒட்டுமொத்த நிறுவனத்தையும் நீங்கள் எப்படி விசாரிக்கலாம்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
டாஸ்மாக் வழக்கில் கூட்டாட்சி தத்துவத்தை மீறும் வகையில் அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. நிதி சார்ந்த முறைகேடு எங்கு நடைபெற்றுள்ளது என அமலாக்கத்துறை கூற முடியுமா? டாஸ்மாக் ஊழியர்களின் செல்போன்களை குளோன் செய்துள்ளது அமலாக்கத்துறை என நீதிபதிகள் தெரிவித்தனர்.டாஸ்மாக் அரசு சார்ந்த நிறுவனமாகும்.
தனி நபர்கள் செய்த விதிமீறலுக்காக ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் விசாரிப்பதா? என தெரிவித்து டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பினர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை திமுக நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பாஜகவின் விமர்சனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் மேலும் கூறியதாவது; பிரதமர்மோடி ஆட்சியில் அமலாக்கத்துறை பா.ஜ.க. வுக்கு எதிரான கட்சிகள் மீது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எப்படியாவது திமுக அரசுக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்கிற நோக்கில் அமலாக்கத்துறை செயல்பட்டு வந்தது.
அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பாஜகவின் விமர்சனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு பிறகாவது மத்திய அரசு அமலாக்க துறையை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அமலாக்கத்துறை பிளாக் மெயில் எஜென்சி போல செயல்படுகிறது. திண்டுக்கல்லில் அமலக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் கெட்ட செய்தியை பார்த்தோம். அமலாக்கத்துறை என்பது பிளாக்மெயில் அமைப்பு போன்று செயல்படுகிறது என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது என்றார்.
அமலாக்கத்துறை சோதனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது எதிர்க்கட்சிகளுக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றார். மேலும் துணை வேந்தர் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடும் விமர்சனத்திற்குள்ளாகும் திமுக ஆட்சி.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதா?