×
 

விஜய் வசதிக்காக அலுவலகம் மாற்றமா? அமைச்சர் ஆதவ் சொன்ன முக்கிய காரணம்..!!

அனைத்து அதிகாரிகளுக்கும் வசதியான, பரந்த இடம் வேண்டும் என்ற உணர்வில்தான் இந்த மாற்றம்” என அமைச்சர் விளக்கினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவது தொடர்பான கேள்விகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விரிவான பதிலளித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர் எ.வ.வேலு எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், இது தனிப்பட்ட வசதிக்காக அல்ல, அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என தெளிவுபடுத்தினார்.

தலைமைச் செயலகத்தில் புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் கலைஞர் கருணாநிதி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு இருந்ததை நினைவுகூர்ந்த அமைச்சர், “அவர்கள் இருவரும் புதிய தலைமைச் செயலகம் தேவை என கருதியதில் எந்த முரண்பாடும் இல்லை. ஏன் அப்படி நினைத்தார்கள்?” என கேள்வி எழுப்பினார். 

தற்போதைய அமைப்பில் முதல்வரைச் சந்திக்க வரும் அரசு அதிகாரிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் பிற விருந்தினர்களுக்கு உட்காரும் இடங்கள் முறையாக மேம்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். முதல்வர் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அலுவலகத்தில் இருக்கும்போது, சுமார் 200 பேர் வரை அவரைச் சுற்றி பணியாற்றுகின்றனர். இதனால் இடநெருக்கடி ஏற்படுகிறது. தற்போது எஸ்1, எஸ்2, எஸ்3 போன்ற அறைகள் 100 சதுர அடிக்குள் உள்ளன. கழிப்பறை வசதி கூட போதுமானதாக இல்லை. “முதல்வர் தனியாக நல்ல அறையில் இருந்தால் போதாது. அனைத்து அதிகாரிகளுக்கும் வசதியான, பரந்த இடம் வேண்டும் என்ற உணர்வில்தான் இந்த மாற்றம்” என அமைச்சர் விளக்கினார்.

இதையும் படிங்க: பேரவையில் உதயநிதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆதவ்... அனைவரையும் அசரவிட்ட அமைச்சரின் கன்னிப்பேச்சு...!

நாமக்கல் கவிஞர் மாளிகையின் ஒன்பதாவது அறையில் முதல்வர் அறை, தனிச் செயலாளர் அலுவலகங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்ட அரங்கம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் தலைமைச் செயலக வளாகத்திலேயே நடைபெற்று வருகின்றன. இது முழுமையான புதிய கட்டடம் கட்டும் வரை தற்காலிக ஏற்பாடு மட்டுமே என அமைச்சர் வலியுறுத்தினார். முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சார காலத்தில் சாதாரண ஓட்டல்களிலும் வாகனங்களிலும் உணவு உண்டு ஓய்வெடுத்த எளிமையானவர் என்பதை நினைவுபடுத்திய அவர், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என எச்சரித்தார்.

இந்த முடிவுக்கு தலைமைச் செயலக ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், அரசு அதிகாரிகளின் பணிச்சுமை மற்றும் பார்வையாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். முதல்வரின் பரந்த உள்ளம் அனைவருக்கும் சமமான வசதியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தையே பிரதிபலிக்கிறது என்பது அவரது வாதத்தின் மையமாக இருந்தது.

 

இதையும் படிங்க: கொதிக்கும் டெல்லி..! மத்திய அரசின் கைது அப்பட்டமான தாக்குதல்... ஆதவ் அர்ஜுனா கண்டனம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share