ஆடி அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்..!!
ஆடி அமாவாசை நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபாடு செய்வது வழக்கம். ஆனால் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, தமிழ் மக்களிடையே ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது முக்கிய சடங்காகும். இது முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்கும், வம்சத்தினருக்கு அவர்களின் ஆசி கிடைப்பதற்கும் உதவுவதாக நம்பப்படுகிறது.
தர்ப்பணம் செய்யும் முறை மிகவும் எளிமையானது, ஆனால் பக்தியுடன் செய்யப்பட வேண்டும். புனிதமான நீர்நிலைகளில், குறிப்பாக ஆறு, கடல் அல்லது குளங்களில் இச்சடங்கு நடைபெறுகிறது. வீட்டிலும் இதைச் செய்யலாம். எள், தர்பை, நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி, மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ம.பி.யில் 'காந்த கண்ணழகி' மோனலிசா.. ப்பா.. கட்டுக்கடங்காத கூட்டம்..!!
இந்நாளில் பித்ரு தோஷம் நீங்குவதாகவும், குடும்பத்தில் நல்லது நடப்பதாகவும் ஐதீகம். ஆடி அமாவாசையன்று தானம் செய்வதும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. ஏழைகளுக்கு உணவு, உடை, பணம் போன்றவை வழங்குவது முன்னோர்களின் ஆன்மாவுக்கு அமைதி தரும் என்பது நம்பிக்கை.
இந்நாளில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். ஆடி அமாவாசை முன்னோர்களின் நினைவைப் போற்றி, அவர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு புனிதமான நாளாகும். இச்சடங்குகளை முறையாகச் செய்வதன் மூலம் குடும்பத்தில் அமைதி, செழிப்பு, மற்றும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அந்த வகையில், ஆடி அமாவாசை நாளான இன்று (ஜூலை 24), தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சிறப்பு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து , ராமநாதசுவாமி கோயிலுக்குள்ளே உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் வசதிக்காக ராமேசுவரத்தில் சிறப்பு நகரப் பேருந்துகளும், ராமேசுவரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் மதுரையிலிருந்து சிறப்பு முன்பதிவில்லாத ரயிலும் இயக்கப்பட்டது. ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டம் சேதுகரை, தேவிப்பட்டினம் மற்றும் வைகை நதி நீர்நிலைகளிலும் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர். இதேபோல் திருச்செந்தூர் கடற்கரையிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நொய்யல் ஆற்றங்கரை, தாமிரபரணி நதிக்கரை மற்றும் காவிரி கரையோரங்களில் ஏராளமான மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
ஆடி அமாவாசையை ஒட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் மட்டுமின்றி கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து, அங்குள்ள விநாயகர் கோயில் முன்பு விளக்கேற்றி, பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர். இதேபோல், திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு காவிரி கரையோரங்களில் இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 1 கிலோ சம்பங்கி ரூ.240க்கு விற்பனையானது. மல்லிகை கிலோ ரூ.1050க்கும், முல்லை 370க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பூக்கள் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ம.பி.யில் 'காந்த கண்ணழகி' மோனலிசா.. ப்பா.. கட்டுக்கடங்காத கூட்டம்..!!