×
 

ஆவின் பால் நஷ்டத்தில் இயங்குவது ஏன்? சாட்டையை சுழற்றும் முதல்வர் விஜய்! புதிய திட்டம் தொடக்கம்!

பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விநியோகம் செய்வதற்கு பதிலாக, தானியங்கி இயந்திரம் வழியே, பால் விற்பனை செய்யும் திட்டம், சோதனை அடிப்படையில், கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் செயல்படுத்தப்பட உள்ளது என, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆவின் பால் விநியோக முறையில் முக்கிய மாற்றத்தை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விநியோகம் செய்வதற்கு மாற்றாக, தானியங்கி பால் விற்பனை இயந்திரங்கள் மூலம் பால் வழங்கும் திட்டம் சோதனை அடிப்படையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான தகவலை ஆவின் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மலைவாசஸ்தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாகக் குறைக்கும் நோக்கில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பால் விநியோகத்தில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு மாற்று வழியை கண்டறிய ஆவினுக்கு உத்தரவிட்டது. அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து இரண்டு தானியங்கி இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன. தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ள நிலையில், இயந்திரங்கள் நிறுவப்பட்ட பிறகு, அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள், ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விநியோகம் செய்ய வேண்டாம் என்று மொத்த விற்பனையாளர்கள் மற்றும் முகவர்களுக்கு அறிவுறுத்தப்படும். அதன் பின்னர் அந்த பகுதிகளில் பாக்கெட் பால் விற்பனை படிப்படியாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நஷ்டத்தில் இயங்கும் ஆவின்!! அனைத்து சலுகைகளும் ரத்து?! பால் அட்டை மானியம் நிறுத்தப்படுமா?

இந்தத் திட்டம் குறித்து நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், கடந்த காலத்தில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பால் விற்பனை செய்யப்பட்டபோது கலப்படம் தொடர்பான புகார்கள் எழுந்ததை சுட்டிக்காட்டினர். எனவே, மீண்டும் இந்த நடைமுறையை அமல்படுத்தும் போது, பாலின் தரம் மற்றும் கலப்படமற்ற விநியோகம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற பால்வளத்துறை ஆய்வுக் கூட்டத்தில், ஆவின் நிறுவனம் தினசரி கொள்முதல் செய்யும் பால் அளவு, விற்பனை நிலை, பால் தட்டுப்பாட்டிற்கான காரணங்கள் மற்றும் விற்பனை அதிகமாக இருந்தும் ஏன் நஷ்டம் ஏற்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விரிவாகக் கேட்டறிந்தார். நஷ்டத்தை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதையும் படிங்க: திவாலாகிறதா ஆவின்.? என்னென்ன முறைகேடுகள்.? வெள்ளை அறிக்கை வேண்டும்..! நயினார் வலியுறுத்தல்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share