×
 
☰

தனுஷ் அரசியல் வருகையால் மாறுமா வாக்கு கணக்கு? தவெகவில் பரபரப்புக்கு என்ன காரணம்?

அரசியல் ஆய்வாளர்கள், தனுஷ் களமிறங்கினால் தவெகவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர்.

நடிகர் தனுஷின் சமீபத்திய டெல்லி பயணம் தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளது. அங்கு அவர் முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்ததாக பரவிய தகவல்கள், அவரது அரசியல் வருகை குறித்த ஊகங்களை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தரப்பில் எதிர்வினைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “இந்தியாவின் வெற்றி தமிழகத்திலிருந்து உருவாகும். மதச்சார்பற்ற சமூக நீதிக் கூட்டணிதான் 2029-இல் பிரதமரை தீர்மானிக்கும். இதை உடைக்கவே புதிய நடிகர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். யார் வேண்டுமானாலும் வரட்டும். சைத்தானின் பிள்ளைகளை டெல்லியிலிருந்து பேக் செய்து அனுப்புகிறார்கள். நாங்கள் எல்லாவற்றையும் கவனித்து வருகிறோம்” என குறிப்பிட்டார். 

இது தனுஷை மறைமுகமாக குறிப்பிடுவதாகவே அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன. அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்ட பலரும் தனுஷின் அரசியல் வாய்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். விஜயை யாரும் சவால் செய்ய முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி நோக்கி தனுஷ்.. அரசியல் கட்சி தொடங்கும் அதிரடி முடிவா? நவ.25-ல் பெண் நிர்வாகிகளுடன் சந்திப்பு?

இதற்கிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இரு கரங்களாலும் வரவேற்பதாக அறிவித்தார். இளைஞர்களிடையே அவருக்குள்ள செல்வாக்கை சுட்டிக்காட்டிய அவர், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று பணியாற்ற விரும்புபவர்களை கட்சி வரவேற்கும் என்றார்.

தனுஷ் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாமல் அமைதியாக உள்ளார். அவரது ரசிகர் மன்றம் ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என மறுபெயரிடப்பட்டது, நலப்பணிகளில் கவனம் செலுத்துவதாக அறிவிக்கப்பட்டது. இவை அரசியல் நகர்வுக்கான அடித்தளமாக பார்க்கப்படுகின்றன.

அரசியல் ஆய்வாளர்கள், தனுஷ் களமிறங்கினால் தவெகவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர். தவெகவின் ஆதரவு நகரங்களிலும் இளைஞர்கள், பெண்களிடையே அதிகம். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் தனுஷின் ரசிகர்கள் பெரும்பாலும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 

இளைஞர் வாக்குகளில் சில இழப்பு ஏற்பட்டாலும் அதிமுக வாக்குகளால் ஈடுகட்ட முடியும். ஆனால் பெண் வாக்குகள் பாதிக்கப்பட்டால் பெரிய பின்னடைவு ஏற்படும். அதிமுக போன்ற வலுவான கட்டமைப்பில் அவர் இணைந்தால், புதிய வாக்காளர்களை ஈர்க்க முடியாமல் திணறும் அக்கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் வாய்ப்பும் உள்ளது. இதனாலேயே தவெக தரப்பில் பதற்றம் நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: ரஜினி ஆதரவு இல்லாமல் விஜயை எதிர்க்க முடியாது! அரசியலில் தனுஷுக்கு பாஜக தலைவர்கள் அட்வைஸ்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share