யாரை தெரு நாய் என்று சொன்னார் நடிகர் ராகவா லாரன்ஸ்..?? கிளம்பிய புதிய சர்ச்சை..!!
விஜய் மீது உள்ள பொறாமையால் எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்வதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்ட அவர், திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடுவார் என தகவல்கள் பரவி வந்த நிலையில், அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்கினார்.
ராகவா லாரன்ஸ், அரசியலுக்கு வருவது குறித்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டிருந்தார். ஜூன் 11-ம் தேதி முடிவை அறிவிக்கத் திட்டமிட்டிருந்த அவர், மூத்த இயக்குநர் பாரதிராஜா மறைவை அடுத்து அறிவிப்பை ஒரு நாள் ஒத்திவைத்தார். பின்னர் ஜூன் 12-ம் தேதி சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்டு, அரசியலுக்கு வரலாமா என்பது குறித்து பொதுமக்களின் ஆலோசனையை நாடினார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், “நான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என நீண்ட நேரம் யோசித்தேன். என்னை அழைத்த அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன். அதை விரைவில் அறிவிக்க உள்ளேன். என் ரசிகர்களை அழைத்து, என் தாயை மேடையேற்றி முக்கிய அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்” என்றார். மேலும் பேசிய அவர், புதிய அரசுக்கு சில கால அவகாசம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!
“நாம் மாற்றம் வேண்டும் என்று நினைத்தோம், அது நடந்துள்ளது. ஒரு புதிய வீட்டிற்கு செல்லும் போது உரிமையாளர் சாவி கொடுத்து அனுப்புவார். உள்ளே சென்ற பிறகுதான் வீட்டில் உள்ள பிரச்சனைகள் – தண்ணீர் பற்றாக்குறை, பிற குறைபாடுகள் – தெரியவரும். அதேபோல் நாட்டை நம்பி ஒப்படைத்துள்ளோம். புதிதாக ஒருவர் வந்தால் தெரு நாய்கள் குரைக்கும். சில நாய்களுக்கு பிஸ்கட் போட்டால் அடங்கும், சிலவற்றுக்கு பிரியாணி வேண்டும். அவற்றின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து, குரைப்பை நிறுத்த வைக்க வேண்டும். ஒரு நாய்க்கே இவ்வளவு என்றால், நாட்டை நிர்வகிப்பவருக்கு நிச்சயம் அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
எதிர்க்கட்சியினர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது பொறாமையால் ஏற்பட்டது என்றும் ராகவா லாரன்ஸ் சுட்டிக்காட்டினார். இவரது “தெரு நாய்” ஒப்பீடு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில், ராகவா லாரன்ஸின் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவரது அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் பரபரப்பாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மக்களால் நடந்த மாற்றம்..!! நாளையுடன் ஒரு மாதம் நிறைவு..!! விஜய்யின் தவெக ஆட்சி எப்படி இருக்கு..?? ஒரு பார்வை..!!