×
 

"கையில் பச்சை குத்தினால் நேரில் சந்திக்கலாம்": ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் அழைப்பு!

கையில் 'நாட்டாமை குடும்பம்' எனப் பச்சை குத்திக் கொண்டால் என்னை நேரடியாகச் சந்திக்கலாம் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

என்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் 'நாட்டாமை குடும்பம்' எனத் தங்களது கைகளில் பச்சை குத்திக்கொண்டால், என்னை நேரடியாகவும் எளிதாகவும் சந்திக்கலாம்" என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் தமக்காகவும் கட்சி இயக்கத்திற்காகவும் உழைத்த ஆதரவாளர்களுக்குச் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பு விருந்து அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ் விழாவில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய நடிகர் சரத்குமார், தமக்கும் தங்களது ஆதரவாளர்களுக்குமான உறவு குறித்துச் சுவாரஸ்யமான சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

 

 

'நாட்டாமை குடும்பம்' எனப் பச்சை குத்திக்கொள்வதுதான் இனி நமது அதிகாரப்பூர்வ அடையாளம். எனது சிந்தனையில் திடீரென உதித்த ஒரு புதுமையான எண்ணம்தான் இது. நமது குடும்பத்தின் அடையாளமாக இது இருக்க வேண்டும் என நினைத்தேன். வேறு எதைப்பற்றியும் நான் யோசிக்கவில்லை; கைகளில் 'நாட்டாமை குடும்பம்' எனப் பச்சை குத்தினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

இதையும் படிங்க: கோயில், மடங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

அனைவரும் கட்டாயமாகப் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என நான் வற்புறுத்தவில்லை. விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் தாராளமாகப் பச்சை குத்திக்கொள்ளலாம். ஆரம்பத்தில் நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்னை வந்து சந்திப்பதற்கு 'கிரீன் கார்டு' (Green Card) போன்ற சலுகை அட்டையை வழங்கலாம் என யோசித்தேன். ஆனால், கையில் 'நாட்டாமை குடும்பம்' எனப் பச்சை குத்திக் கொண்டால் அதுவே நமது குடும்ப உறுப்பினருக்கான சான்றாகிவிடும். கையில் இந்தப் பச்சை இருந்தால் என்னை எந்தத் தடங்கலுமின்றி நேரடியாகச் சந்திக்கலாம்," என்று தெரிவித்தார்.

சரத்குமாரின் இப் பேச்சு தொடர்பான வீடியோக்கள் மற்றும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் ஆதரவாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி கவனத்தைப் பெற்று வருகின்றன.

 

 


 

இதையும் படிங்க: வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு நாள்: தியாகிகளுக்குப் பிரதமர் மோடி மரியாதை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share