பெருமைமிகு வரலாறு..! அதிமுக 55 ஆம் ஆண்டு விழா..!! EPS உற்சாகம்.!
அதிமுகவின் 55 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி பெருமையுடன் பேசி உள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கழகம் 54 ஆண்டுகால வரலாற்றை நிறைவு செய்து 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பொன்னான தருணத்தில் கழக உடன்பிறப்புகளுக்கு இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். புரட்சித் தலைவரின் தியாகத்தால் உருவாகி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட இந்த இயக்கம் மக்களுக்காகவே தொடர்ந்து இயங்கும் என்ற உறுதியோடு வெற்றிப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே என்று உரையைத் தொடங்கிய பழனிசாமி, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நினைவுகூர்ந்தார். இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும் என்ற அந்த அறிவிப்பை நனவாக்கும் உறுதியோடு கழகம் தனது பணியைத் தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதற்கு முன்பு எத்தனையோ எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட கழகத் தோழர்களைப் புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்கள் என்று அழைத்து, அவர்களின் வீரத்தைப் பாராட்டினார்.
இன்றைக்கு முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட வேண்டும் என்று அறைகூவல் விடுத்த பழனிசாமி, ஒற்றுமையோடும் உறுதியோடும் களமிறங்கிட அனைவரையும் வலியுறுத்தினார். புரட்சித் தலைவர் காட்டிய பாதையிலும், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துத் தந்த இலட்சிய வழியிலும் தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!
கழகத்தின் 55 ஆண்டுகாலப் பயணத்தைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் தனது பேரன்பை வெளிப்படுத்திய பழனிசாமி, என்றென்றும் அஇஅதிமுக என்ற உணர்வோடு தொடர்ந்து பணியாற்ற அழைப்பு விடுத்தார். மக்கள் நலனுக்காகவும் தமிழக உரிமைகளுக்காகவும் கழகம் தொடர்ந்து போராடும் என்ற உறுதியை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இதையும் படிங்க: லட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம் அதிமுக..! மக்கள் பணியே முக்கியம்..! EPS பெருமிதம்.!