சூடு பிடிச்சாச்சு..! ஜெ. பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல்? திமுகவை முந்தும் EPS..!
ஜெயலலிதா பிறந்த நாளில் வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 24-ஆம் தேதி, அதாவது பிப்ரவரி 24 அன்று, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கு இன்னும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படாத நிலையில், அதிமுக தரப்பில் இருந்து இந்த அதிரடி நகர்வு அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா இருந்த காலத்தில், தேர்தல் சமயங்களில் வேட்பாளர் பட்டியல்களை அல்லது முக்கிய அறிவிப்புகளை அவரது பிறந்தநாள் அல்லது முக்கிய தினங்களில் வெளியிடுவது வழக்கமாக இருந்தது. அதே போன்ற ஸ்டைலைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமியும் இப்போது அதே பாணியில் செயல்படத் தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே எம்ஜிஆர் பிறந்தநாளான ஜனவரி 17 அன்று முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதிமுக, இப்போது ஜெயலலிதாவின் பிறந்தநாளைப் பயன்படுத்தி மீண்டும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்பைத் திட்டமிட்டுள்ளது.
இந்த முதற்கட்ட பட்டியலில் சுமார் 15 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதோடு, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் பட்டியலும் இதே நாளில் வெளியாக வாய்ப்புள்ளது. தற்போது அதிமுக தலைமை கூட்டணி பேச்சுவார்த்தைகளை இறுதி செய்து வருவதால், பிப்ரவரி 24 அன்று கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி பங்கீடு குறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.தேர்தல் களத்தில் அதிமுக இப்போது மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறது.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... முனைப்பு காட்டும் அதிமுக..! பிப்.21 முதல் மீண்டும் EPS சுற்றுப்பயணம்..!
ஏற்கனவே பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து, மக்களிடையே தங்கள் கொள்கைகளை எடுத்துச் சென்று வரும் நிலையில், இந்த வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன. மறுபக்கம், ஆளும் திமுகவும் தங்கள் தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வரும் சூழலில், அதனை முந்தும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமியின் இந்த நகர்வு தமிழக அரசியலில் புதிய சூடுபிடிக்கும் தருணமாக அமையும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எத வச்சு ஊழல்னு சொல்லுறாரு? ஊழல் தடுப்பு சட்டம்னா என்ன தெரியுமா? EPS- ஐ வெளுத்து வாங்கிய அருண்ராஜ்..!