போலி வாக்குறுதி முதல்வருக்கு புத்தாண்டு வாழ்த்து... அதிமுக கடும் விமர்சனம்...!
போலி வாக்குறுதி அளிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து என அதிமுக விமர்சனம் செய்துள்ளது.
நிரந்தர பணி, சம வேலைக்கு சம ஊதியம், கர்ப்பகால விடுப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கூறி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தின.போராட்டம் டிசம்பர் 18-ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமாகத் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் அருகே நூற்றுக்கணக்கான செவிலியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் தலையீடு செய்து பலரை கைது செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அதன்பிறகு கூடுவாஞ்சேரி அரசு முதன்மை சுகாதார நிலையம் அருகே போராட்டம் தொடர்ந்தது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் இதில் பங்கேற்றனர். சிலர் குழந்தைகளுடன் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால், இது பெரும் கவனத்தை ஈர்த்தது.இந்த செவிலியர்கள் பெரும்பாலும் 2014-15 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். அப்போது தொகுப்பூதியம் ரூ.14,000 ஆக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அது ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் (பிரிவு 356) திமுக அனைத்து ஒப்பந்த செவிலியர்களையும் நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்றாதது போராட்டத்தின் முக்கிய காரணமாக அமைந்தது.
கோவிட் காலத்தில் நியமிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட 700-க்கும் மேற்பட்ட செவிலியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பதும் ஒரு முக்கிய கோரிக்கையாக இருந்தது.சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் டிசம்பர் 19, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் போராட்டக்காரர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நடந்த இந்தப் பேச்சுவார்த்தைகளில், முதற்கட்டமாக 1,000 செவிலியர்களை நிரந்தரம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: HAPPY NEW YEAR தலைவரே... இபிஎஸ்-க்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல படையெடுத்த அதிமுக நிர்வாகிகள்...!
புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, நிலுவையில் உள்ள பதவி உயர்வுகளை வழங்கி, மீதமுள்ள செவிலியர்களையும் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டது. மேலும், கர்ப்பகால விடுப்புக்கு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பணிநிரந்தரம் செய்கிறோம் என்று போலி வாக்குறுதி அளித்து ஏமாற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறுவதாக அதிமுக விமர்சனம் செய்துள்ளது. உரிமைக்காக போராடும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குரல் கொடுக்கும் விதமாக அதிமுக இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் திமுகவின் 23ஆம் புலிகேசி ஆட்சி... போதைப் பொருட்கள் டோர் டெலிவரி... செல்லூர் ராஜு விமர்சனம்..!