உழவுக்கு ரூ.3000, உழவர்களுக்கு ரூ.4000... வேளாண் பட்ஜெட்டில் அடுத்தடுத்து அடி தூள் அறிவிப்புகள்...!
மண் வளத்தை மீட்டெடுக்கும் வகையில், ஒரு லட்சம் ஏக்கர் பரப்பிற்கு தேவையான தக்கைப்பூண்டு, சணப்பு, கொளிஞ்சி போன்ற பசுந்தாள் உர விதைகளும், 22,000 ஏக்கருக்கு தேவையான பல்வகை தானிய விதைகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவித்ததாவது: வேளாண்மைக்கு ஆதாரமாக விளங்கும் மண்ணின் வளத்தைப் பாதுகாப்பது, நீடித்த மற்றும் நிலையான உணவு உற்பத்திக்கும் வளம் குன்றா வேளாண்மைக்கும் இன்றியமையாததாகும்.
"மண்புழுக்கள்தான் உழவர் நண்பர்கள்" என்பார்கள். மண்புழுக்கள் தங்களுடைய வளைகளின் மூலம் மழைநீரை மண்ணுக்குள் கொண்டு சேர்க்கின்றன. ஆகவே, மண்புழுக்கள் வாழும் அளவிற்கு மண்வளத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் செம்மண், பழுப்பு நிற மண், கரிசல் மண், சாம்பல் நிற மண், வண்டல் மண் என பல்வேறு மண் வகைகள் உள்ளன. ஒவ்வொரு மண்ணுக்கும் ஏற்ற பயிர் இருப்பதுபோல, ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற மண் வகையும் உண்டு.
இதையும் படிங்க: பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்! மன்னிப்பு கோரினார் மார்க் ஸூக்கர்பெர்க்! மெட்டாவுக்கு எச்சரிக்கை!
ரசாயன உரங்களை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துவது, பயிர் கழிவுகள் மண்ணில் மட்காமல் இருப்பது, பண்ணைக் கழிவுகளை முறையாக மறுசுழற்சி செய்யாதது போன்ற காரணங்களால், மண்ணில் உள்ள உயிர்மக் கரிமத்தின் அளவு குறைவதுடன், மண் நலமும் வேளாண் உற்பத்தித் திறனும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், களர் மற்றும் உவர் நிலங்களை சீர்திருத்துதல், ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், இயற்கை மற்றும் உயிர்ம வேளாண் முறைகளை ஊக்குவித்தல் ஆகிய செயல்பாடுகளை மேற்கொண்டு வளமான தமிழ்மண்ணை வருங்காலம் காணும் வகையில், தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்தாண்டுத் திட்டமாக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.
மண்வளத்தை அறிந்து அதற்கேற்ப சமச்சீர் உரப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு 4 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் மண்நல அட்டைகள் வழங்கப்படும்.
கூடுதலாக, உழவர் அடையாள எண் பெற்ற சுமார் 3 லட்சம் விவசாயிகளுக்கு, ஒன்றிய மற்றும் மாநில அரசுத் திட்டத்தின் கீழ் 6 கோடியே 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மண்நல அட்டைகள் வழங்கப்படும்.
மண் வளத்தை மீட்டெடுக்கும் வகையில், ஒரு லட்சம் ஏக்கர் பரப்பிற்கு தேவையான தக்கைப்பூண்டு, சணப்பு, கொளிஞ்சி போன்ற பசுந்தாள் உர விதைகளும், 22,000 ஏக்கருக்கு தேவையான பல்வகை தானிய விதைகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
மேலும், வளர்ந்த பசுந்தாள்களை நிலத்திலேயே மடக்கி உழுது மட்கச் செய்வதற்கு ஏக்கருக்கு 3,000 ரூபாய் உழவு மானியமும் வழங்கப்படும். இதற்காக 63 கோடியே 50 லட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.
மண் வளத்தைப் பாதுகாக்கும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், ஒரு லட்சம் ஏக்கருக்கு தேவையான திரவ உயிர் உரங்கள் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
உரப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் நீரில் கரையக்கூடிய உரங்கள், மகசூலை அதிகரிக்க பருத்திக்கு Cotton Plus, கரும்பிற்கு Sugarcane Booster, நெற்பயிரில் பூக்கும் தன்மையை மேம்படுத்த Rice Bloom ஆகிய பயிர் ஊக்கிகள் 12 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் விநியோகிக்கப்படும்.
மாநிலம் முழுவதும் உயிர்ம வேளாண்மையை பரவலாக்கும் நோக்கில், 2026–27ஆம் ஆண்டில் மாநில அரசின் சிறப்புத் திட்டமாக 20,000 ஏக்கரில் உயிர்ம வேளாண் முறைகளைப் பின்பற்றும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 4,000 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை வழங்க 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதுதவிர, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஒருங்கிணைத்து 7,500 ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மைத் தொகுப்புகள் உருவாக்கப்படும்.
இயற்கை வேளாண்மை வாயிலாக மண்வளத்தை மேம்படுத்தி, நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்வதற்காக National Mission on Natural Farming திட்டத்தின் கீழ் 3,125 ஏக்கரில் புதிய இயற்கை வேளாண்மைத் தொகுப்புகள் உருவாக்கப்படும்.
மேலும், 7,500 ஏக்கரில் இயற்கை வேளாண்மை மேற்கொண்டு வரும் விவசாயிகள் இரண்டாம் ஆண்டு செயல்பாடுகளைத் தொடர 2026–27ஆம் ஆண்டில் 9 கோடியே 12 லட்சம் ரூபாய் ஒன்றிய மற்றும் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உயிர்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நிரந்தர மண்புழு உரக் கூடங்கள் அமைத்திட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தேசிய உயிர்ம உற்பத்தித் திட்டத்தில் புதிதாக பதிவு செய்யும் விவசாயிகளுக்கான பதிவு கட்டணமும், மாறுதல் காலத்தில் உள்ள விவசாயிகளுக்கான புதுப்பித்தல் கட்டணமும் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உயிர்ம விவசாயிகளுக்கு உயிர்மச் சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும்.
கடந்த ஆண்டு புதிதாக பதிவு செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே கட்டண விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு முதல் உயிர்மச் சான்று பெறுவதற்கான மாறுதல் காலத்திலும் விவசாயிகள் தொடர்ந்து உயிர்மை நிலையைப் பேணுவதை ஊக்குவிக்கும் வகையில், மாறுதல் காலத்திற்கும் இந்த கட்டண விலக்கு விரிவுபடுத்தப்படும்.
தேசிய உயிர்ம உற்பத்தித் திட்டத்தில் சான்றளிக்கப்படும் உயிர்ம விளைபொருட்களில் நச்சுப் பொருட்களின் தன்மையை விவசாயிகள் அறிந்து, அவற்றின் தரத்தை உறுதிப்படுத்தி, உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு சந்தைகளில் விற்பனை செய்து அதிக விலை பெறவும், நஞ்சற்ற பொருட்களை நுகர்வோர் பெறவும், நச்சு மதிப்பீட்டு பரிசோதனைக்கான கட்டணத்திற்கு முழு மானியம் வழங்கும் பொருட்டு 25 லட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.
களர், உவர் தன்மையால் பாதிக்கப்பட்ட மற்றும் வளம் குறைந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காக, மண் சீர்திருத்தம் குறித்து 2,000 ஏக்கரில் செயல்விளக்கங்கள் மேற்கொள்ள 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
மண்நல மேம்பாடு குறித்த தொழில்நுட்பங்களை உழவர் பெருமக்களுக்கு எடுத்துரைக்க விழிப்புணர்வு மற்றும் விளம்பரப் பணிகள் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள, நேரடி நெல் விதைப்பு, நீர் சேமிக்கும் பாசன முறைகள், மெல்லக் கரையும் உரங்களின் பயன்பாடு ஆகியவற்றைப் பின்பற்றி, பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 50 சதவீதம் வரை குறைத்து, கரிமத்தை மண்ணில் சேமிக்கும் விவசாயிகளுக்கு கார்பன் வர்த்தகம் மூலம் கூடுதல் வருமானம் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் 2,000 ஏக்கரில் செயல்விளக்கங்கள் அமைத்து, கண்காணிப்பு மற்றும் சீராய்வு நெறிமுறைகளை உருவாக்க மாநில நிதியிலிருந்து 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம் 2026–27ஆம் ஆண்டில் 122 கோடியே 51 லட்சம் ரூபாய் நிதியில் 10 கூறுகளுடன் செயல்படுத்தப்படும்.
இதையும் படிங்க: சூப்பர் எல் நினோ எச்சரிக்கை! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து? வேளாண் பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்!