எடப்பாடி பழனிசாமி அதிரடி! வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்களின் பதவிகள் பறிப்பு!
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோருக்கு ஆதரவாக உள்ளவர்களின் கட்சிப் பொறுப்புகளை பறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
கட்சியின் கொள்கைகளுக்கும் முடிவுகளுக்கும் எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, 25 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கப்பட்டுள்ளார்.
தலைமை நிலைய செயலாளர் பொறுப்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. சி.வி.சண்முகம், காமராஜ், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.பி.அன்பழகன், பெஞ்சமின், உடுமலை ராதாகிருஷ்ணன், ஜக்கையன், இசக்கி சுப்பையா ஆகியோரின் அமைப்பு செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டார் இபிஎஸ்..!! சிவி சண்முகம் அதிரடி பேச்சு..!!
சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தவெக அரசுக்கு எதிராக வாக்களித்த நிலையில், வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவாக வாக்களித்தது அதிமுகவில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு ஆதரவாகச் செயல்பட்ட நிர்வாகிகளைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அதிரடிப் பதவி பறிப்பு நடவடிக்கைகள் அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, கட்சியின் எதிர்காலத் தலைமை குறித்த விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக-வில் பிளவு? நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து திருமாவளவன் சொன்ன 'பரபரப்பு' கருத்து!