×
 

6 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகுமா? தலைமை செயலகத்தில் சபாநாயகர் கொடுத்த வாக்குறுதி!

தொகுதி மக்களுக்குத் துரோகம் செய்து தவெகவில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களைக் கட்சி தாவல் தடைச் சட்டத்தில் தகுதி நீக்கம் செய்யக் கோரி எடப்பாடி பழனிச்சாமியின் கடிதத்தைச் சபாநாயகரிடம் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் அளித்தனர்.

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உடனடியாகத் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்ததாவது தொகுதி மக்களுக்குத் துரோகம் செய்து, குதிரை பேரத்தின் மூலமாகத் தவெகவில் இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே சபாநாயகரிடம் வலியுறுத்தியிருந்தோம்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குச் சபாநாயகர் கடிதம் மூலம் விளக்கம் கேட்டிருந்தார். அதன்படி, எடப்பாடி பழனிசாமியின் பதில் கடிதத்தை இன்று சபாநாயகரிடம் நேரில் வழங்கினோம். இக்கடிதத்தைப் பெற்றுக்கொண்ட சபாநாயகர், கட்சி மாறிய எம்.எல்.ஏ-க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: சி.விஜயபாஸ்கர் விவகாரம்: சபாநாயகர் முடிவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

அதிமுக மூத்த நிர்வாகி தளவாய் சுந்தரம் பேட்டியளித்ததாவது அமைச்சராக வேண்டும் என்ற பேராசையிலேயே எம்.எல்.ஏ-க்கள் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், ராஜினாமா செய்துவிட்டு தவெக சார்பில் வரும் இடைத்தேர்தலில் கூட அவர்களால் நிற்க முடியாது.

திமுக - அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாகத் திருமாவளவன், சண்முகம் போன்றோர் கூறுவது குறித்த கேள்விக்கு, அப்படி ஒரு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்திருந்தால் அதில் இவர்கள் பக்கத்தில் இருந்தார்களா? திருமாவளவன் ஆளுங்கட்சி கூட்டணியில் இணைந்து அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால் எதை வேண்டுமானாலும் பேசுவார் எனப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: துரோகிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share