அதிமுக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம்! நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை!
சென்னையில் நாளை மாலை 4 மணிக்கு அவசரமாக கூடுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்களின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) பாஜக, பாமக போன்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக இன்று கையெழுத்தாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, 234 தொகுதிகளிலும் ஒருங்கிணைந்த தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுரைகளை வழங்குவார்.
அதிமுக சுமார் 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. இதற்கான வேட்பாளர் நேர்காணல்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது மற்றும் பி-ஃபார்ம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: 2026 தமிழக தேர்தல்: சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு!
ஆளுங்கட்சியான திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தற்போதைய செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, குறிப்பாகப் பொருளாதாரச் சுமை மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றை முன்வைத்துத் தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்படும்.
தமிழகத்துடன் சேர்த்துப் புதுச்சேரியிலும் தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்குள்ள அதிமுக நிர்வாகிகளுக்கும் சில முக்கியமான அறிவுறுத்தல்கள் இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: #BREAKING: தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு!