×
 

“விஜயை மிரட்டுகிறது பாஜக!” - சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் அதிரடி!

பாஜக மிரட்டலுக்கு அஞ்சி விஜய் மௌனம் காக்கிறாரா என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பொதுக்கூட்டம் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பரபரப்பான பேட்டியளித்தார். மதுராந்தகம் மேடையில் அதிமுக - பாஜக - பாமக - அமமுக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டணியைப் பலவீனம் அடைந்த கூட்டணி என அவர் விமர்சித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டணியைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று அழைப்பதன் மூலம், அவர் பாஜகவின் தலைமையை ஏற்றுக்கொண்டதை ஒப்புக்கொள்கிறார் என திருமாவளவன் சாடினார். "ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பாஜகவினரைத் தனித்தே வைத்திருக்கச் சொல்லியிருப்பார். ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் பாஜகவின் நிழலில் இருப்பதை வெளிப்படையாகக் காட்டுகிறார்; அந்த அளவிற்கு அதிமுக பலவீனம் அடைந்துவிட்டது" என அவர் குறிப்பிட்டார். மேலும், 2021 தேர்தலில் தோல்வியடைந்த அதே கூட்டணியே இப்போது மீண்டும் நிலவுகிறது என்றும், தேமுதிக போன்ற கட்சிகள் இல்லாத இந்தக் கூட்டணி ஒருபோதும் முழுமை அடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “இரட்டை எஞ்சின் அல்ல... அது டப்பா எஞ்சின்!” மதுராந்தகம் மேடைக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த முதலமைச்சர்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க) 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, அது ஒரு சுயேச்சை சின்னம்; அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என சுருக்கமாகப் பதிலளித்தார். இருப்பினும், விஜய் மீதான பாஜகவின் அழுத்தம் குறித்து அவர் காரசாரமான கருத்துகளை முன்வைத்தார்.

பாஜக தனது கூட்டணியில் இணையாத கட்சிகளைப் பல்வேறு உத்திகளைக் கையாண்டு மிரட்டி வருகிறது. அதேபோல விஜய் அவர்களுக்கும், அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கும் பாஜக தரப்பிலிருந்து மறைமுக அழுத்தமும், அச்சுறுத்தலும் கொடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன. ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாமல் இருப்பதற்குப் பின்னால் பாஜகவின் அரசியல் தலையீடு இருப்பதாகப் பலரும் பேசுகிறார்கள். அப்படியிருக்கும்போது விஜய் அவர்கள் ஏன் மௌனம் சாதிக்கிறார்? அவர் பாஜகவையோ அல்லது மோடியையோ எதிர்ப்பதற்கு அச்சப்படுகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

பாஜக கொடுக்கும் நெருக்கடிக்கு ஆளாகி விஜய் அந்தக் கூட்டணியில் இணைந்தால், அவருடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அவரைச் சுற்றி இருப்பவர்கள் விஜய்யிடம் ஒரு பொய்யான மாயையை உருவாக்கி வருகிறார்கள். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் சிறப்பான ஆதரவு உள்ளது என்றும், தேர்தலுக்கு முன் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் அதையே உணர்த்துவதாகவும் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்தார். வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்புவதன் மூலம் திமுக கூட்டணியைத் தோற்கடிக்க முடியாது என்றும் அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுராந்தகத்தில் மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. போலீஸ் குவிப்பு, போக்குவரத்து மாற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share