×
 

"ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்": இபிஎஸ்-க்கு நத்தம் விஸ்வநாதன், வேலுமணி கடிதம்!

காவிரி மற்றும் பயிர்க்கடன் விவகாரங்களில் அதிமுக நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி.வேலுமணி, வேறு மாவட்டப் பொறுப்புகள் வழங்கப்பட்டதால் பங்கேற்க முடியாது என அறிவித்துள்ளனர்.  

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்யாத த.வெ.க அரசைக் கண்டித்தும் அதிமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர், தங்களைச் சொந்த மாவட்டங்களை விடுத்து வேறு மாவட்டங்களுக்குப் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என அதிரடியாக அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இருவரும் கூட்டாக அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், மாவட்டங்களில் போராட்டத்திற்குத் தலைமை தாங்க வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், இராமநாதபுரம் மாவட்டம் நத்தம் விஸ்வநாதன், தேனி மாவட்டம் எஸ்.பி.வேலுமணி, சேலம் மாவட்டம் பி.தங்கமணி, ராணிப்பேட்டை மாவட்டம் கே.பி.அன்பழகன் என மூத்த தலைவர்களை அவரவர் சொந்த மாவட்டங்களில் தலைமை ஏற்கவிடாமல் தவிர்த்து, வேண்டுமென்றே வேறு மாவட்டங்களுக்குப் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்! கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேட்டி!

  ஏற்கனவே கருத்து வேறுபாடு காரணமாகக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மீண்டும் பதவிகள் வழங்கப்படும் என அளிக்கப்பட்ட உறுதியை நிறைவேற்றாமல் பொதுச்செயலாளர் காலம் தாழ்த்தி வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசிகளைப் புறக்கணிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேகதாது விவகாரத்திலும், விவசாயிகள் கடனுதவி விவகாரத்திலும் அதிமுக எடுக்கும் அனைத்துப் போராட்டங்களுக்கும் ஆதரவளிப்போம் எனக் கூறியுள்ள தலைவர்கள், வேறு மாவட்டங்களுக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இயலாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.  

 

 

இதையும் படிங்க: நாளை சட்டமன்றம் கூடும் சூழலில் கைது தேவையா? ஆளுங்கட்சிக்கு திருமாவளவன் அறிவுரை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share