அடுத்த மாதம் அதிமுக செயற்குழு கூட்டம்.. உட்கட்சி பிரச்சினையை சமாளிக்க இபிஎஸ் ஆயத்தம்..!!
உட்கட்சி பூசல்களுக்கு இடையே அடுத்த மாதம் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், இருமுறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். அதற்கேற்ப அதிமுக வழக்கமாக டிசம்பர் மாதத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களை பிரமாண்டமாக நடத்தி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு, சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் எழுந்துள்ள உட்கட்சி பூசலை சமாளிக்கும் நோக்கில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதமே (ஆகஸ்ட்) செயற்குழு கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், கட்சிக்குள் அதிருப்தி தலைதூக்கியது. சில முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் வேறுபாடுகளை வெளிப்படுத்தினர். இதனைச் சமாளிக்க எடப்பாடி பழனிசாமி, கட்சியின் 85 மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். ஜூன் 13ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஆலோசனைகள், ஜூலை 25ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. கூட்டத்திற்கு வராத நிர்வாகிகளின் பெயர்களைத் தனியாகக் குறித்து வைத்துள்ளார்.
இந்தக் கூட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், பி. தங்கமணி ஆகியோர் பங்கேற்கவில்லை. அதேபோல் எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழி தேவன், சுகுமார், ராகேஷ் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவில்லை. இவர்களிடம் விளக்கம் கேட்கவும், அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடன்படாதவர்களை கட்சியிலிருந்து நீக்கி, காலியாகும் பதவிகளுக்கு உடனடியாக புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 4 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விவகாரம்! ஜூலை 30-ல் நேரில் வந்து விளக்கமளிக்க இ.பி.எஸ்-ஸுக்கு அழைப்பு!
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அதிக இடங்களை வெல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள் கூட்டங்களில் அவர் வலியுறுத்தியுள்ளார். முக்கிய நிர்வாகிகளும் களத்தில் இறங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். எனவே ஆகஸ்ட் செயற்குழு கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தயாரிப்பு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கைகள் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!